நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக தான் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக, காஞ்சிபுரம் தவிர்த்து முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது.
அதில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து ஒரு பிரபலமாக பேசி வந்த அவர், முதன்முறையாக நேரடி அரசியலில் அதிரடியாக களமிறங்கியுள்ளது பலரையும் உற்றுநோக்க செய்துள்ளது.
பாமக மட்டும் தான் போராடுகிறது!
இந்தநிலையில் அவர் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் பாமக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “தமிழர்களின் இனம், மொழி, பண்பாடு, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் முதல் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட ஒரு பிரச்சனை என்றால் முதலில் களத்தில் இறங்கி போராடுவது பாமக தான். அது மக்களுடைய இயக்கமாக இருப்பதால் நான் பாமகவில் இணைந்துள்ளேன். தற்போது கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19க்கு பிறகு பாஜக கூட்டணி கிடையாது!
மேலும், “பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி மட்டும் தான். இது கொள்கை கூட்டணி இல்லை. ஏப்ரல் 19க்கு பிறகு இந்த கூட்டணி இருக்காது” என்று அதிரடியாக தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
9 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்தது பாமக!
அமலாக்கத்துறை கைது… இரவு முழுவதும் எங்கு இருந்தார் கெஜ்ரிவால்?