திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
முன்னதாக, சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழு ஜிஆர்டி ஹோட்டலில் காத்திருந்தது. டெல்லி மேலிடத்தின் அழைப்புக்காக இக்குழு காத்திருந்தது.
அதே நேரத்தில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுகவின் டிஆர் பாலு, ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தனர்.
இதனையடுத்து ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்துக்கு சென்று கொண்டு இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டு ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பேசினர்.
ப.சிதம்பரத்திடம், “காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவை அறிவாலயத்துக்கு வர சொல்லிவிட்டோம்.. நாங்களும் அறிவாலயத்துக்கு போய்க் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார் ஸ்டாலின்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தொடர்பு கொண்டு பேசிய ப.சிதம்பரம், ஸ்டாலின் சொன்ன தகவலை தெரிவித்தார்; மேலும் ஸ்டாலினிடம் பேசுமாறும் சொன்னார்.
இதன் பின்னர் முதல்வர் ஸ்டாலினை மல்லிகார்ஜூன கார்கே தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.
