சிலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எதுவும் இருக்காது. ஆனால், தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்கும்போது கால்கள் மரத்துப் போகும். எழுந்து நிற்கவே சிரமமாக இருக்கும். இப்படி கால்கள் மரத்துப் போக என்ன காரணம்…. இதற்கு என்ன தீர்வு?
பொதுவாகவே நாம் தரையில் உட்கார்ந்து எழுந்துக்கொள்ளும்போது கால்கள் மரத்துப்போக வாய்ப்பு உண்டு. இதை ‘ஸ்லீப்பிங் ஃபுட் சிண்ட்ரோம்’ (Sleeping Foot Syndrome) என்று சொல்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். மேலும், “பெரோனியல் நரம்பின் மீது இடுப்பிலுள்ள எலும்பு ஒன்று அழுத்தம் கொடுப்பதால் பாத நரம்புகளுக்கான சிக்னல் சரியாகப் போவதில் தடை ஏற்படலாம். அதன் விளைவாக மரத்துப்போன உணர்வு வரும். ஒருவேளை இந்தப் பிரச்சினை சப்பணமிட்டு உட்காராத நிலையிலேயே வந்தால்தான் இது குறித்து பயப்பட வேண்டும்.
‘ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ (Restless Legs Syndrome) என்ற பாதிப்பு கணுக்கால் தசைகளில் சிலருக்கு வரலாம். இந்தப் பிரச்சினையில் கணுக்கால் தசைகளில் வலி இருக்கும். அந்தப் பிரச்னை இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாடோ, வைட்டமின் பி 12 குறைபாடோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான உணவுகளைச் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.
மற்றபடி உட்கார்ந்து எழுந்துகொள்ளும்போது கால்கள் மரத்துப்போதல் பிரச்சினை குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. சப்பணமிட்டு உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கால்களை அசைத்தாலே இதைத் தவிர்க்கலாம். ஆனால், சும்மா இருக்கும்போதோ, நடக்கும்போதோ கால்கள் மரத்துப்போனால் அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைத்தான் சாப்பிடுகிறீர்களா?