சந்து சாம்பியன்: விமர்சனம்!

Published On:

| By Selvam

உதயசங்கரன் பாடகலிங்கம்

ரசிக்க வைக்கும் ஸ்போர்ட்ஸ் பயோகிராஃபி!

இந்தி திரையுலகில் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுகிற ஒரு இயக்குனர் கபீர் கான். அவர் முதன்முறையாக இயக்கிய ‘காபூல் எக்ஸ்பிரஸ்’  தொடங்கி ’நியூயார்க்’, ‘ஏக் தா டைகர்’, ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘பேண்டம்’, ‘ட்யூப்லைட்’, ’83’ என்று தான் இயக்கிய ஒவ்வொரு படத்தையும் தனித்துவமான உள்ளடக்கத்துடன் தந்தவர்.

அதேநேரத்தில், கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் விரும்புகிற வகையிலும் அப்படங்கள் இருக்கும். அந்த வரிசையில் மேலும் ஒன்றாக இணைந்திருக்கிறது ‘சந்து சாம்பியன்’. கார்த்திக் ஆர்யன், விஜய் ராஸ், யஷ்பால் சர்மா, ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படமானது முரளிகாந்த் பேத்கர் எனும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஒரு இந்திய நீச்சல் வீரரின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது.

உண்மையான சாம்பியன்!

மகாராஷ்டிராவிலுள்ள சங்கிலி எனுமிடத்திலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்கிறார் ஒரு முதியவர். அங்கிருக்கும் போலீசாரிடம் ஒரு புகார் கொடுக்க வேண்டுமென்று தெரிவிக்கிறார். ‘யார் மீது’ என்று அவர்கள் கேட்க, 1974ஆம் ஆண்டு முதல் 2017 வரையிலான முன்னாள் குடியரசுத்தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். அவர்கள் தனக்கு அர்ஜுனா விருதைத் தர முன்வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

அதனைக் கேட்டதும், ‘நீங்கள்  யார்’ என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர் (ஷ்ரேயாஸ் தல்பாதே). அவர் பதில் சொல்லத் தொடங்குகிறார். அந்த முதியவரின் பெயர் முரளிகாந்த் பேத்கர் (கார்த்திக் ஆர்யன்). அருகிலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்த அவர், சிறுவயதில் மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புகிறார். அதில் வெற்றி பெற்று, நாட்டின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே அவரது ஆசை.

பதின்ம வயதில், முரளிகாந்த் ஒரு குஸ்திப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கிறார். அதில் அவர் வெல்கிறார். ஆனால், அவருக்கு எதிராக மோதியவரின் கிராமத்தினர் அடிதடியில் இறங்குகின்றனர். அதையடுத்து, அவரைக் கொல்லும் வெறியோடு துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து, ஓடும் ரயிலில் ஏறுகிறார் முரளிகாந்த்.ரயிலில் அறிமுகமாகும் கர்னைல் சிங் (புவன் அரோரா) உதவியினால் ராணுவத்தேர்வில் பங்கேற்கிறார். அதில் தேர்வாகிறார்.

ராணுவத்தில் பணியாற்றும்போது குத்துச்சண்டை பயிற்சியாளர் டைகர் அலியைச் (விஜய் ராஸ்) சந்திக்கிறார் முரளிகாந்த். அவரது கடினமான பயிற்சிகளைப் பின்பற்றி, ஜப்பானில் நடக்கும் ராணுவ வீரர்களுக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்கிறார். அரையிறுதி வரை செல்பவர், இறுதிப்போட்டியில் தனது அஜாக்கிரதையினால் தோற்றுப் போகிறார். அது, அவருக்கும் டைகர் அலிக்கும் இடையே இடைவெளியை உருவாக்குகிறது.

இந்த நிலையில், 1965-இல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் காயமடைகிறார் முரளிகாந்த். இரண்டு ஆண்டுகள் கோமாவில் இருக்கும் அவர், பிறகு மெல்ல இயல்புநிலைக்குத் திரும்புகிறார். ஆனாலும், இடுப்புக்கீழே செயலிழந்து போன நிலையைக் கண்டு அவர் துவண்டு போகிறார். நீச்சல் பயிற்சி மட்டுமே அவரது செயல்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் வழி என்கின்றனர் மருத்துவர்கள்.

அந்த நேரத்தில், அவரது பெற்றோரும் சகோதரரும் கூடக் காண வருகின்றனர். ஆனால், அவர்களாலும் முரளிகாந்தைத் தங்களது பராமரிப்பில் வைத்துக்கொள்ள முடியாத சூழல். அதனால் மனம் வெதும்பிப் போகிறார் முரளிகாந்த்.

மனமுடைந்து இருக்கும் அவரை மீண்டும் சந்திக்கிறார் டைகர் அலி. இம்முறை அவரைத் தொடர்ந்து நீச்சலில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்துகிறார். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்லலாம் என்கிறார்.அதனை முரளிகாந்த் ஏற்றாரா, பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றாரா என்று சொல்கிறது இப்படத்தின் கிளைமேக்ஸ்.

’நீ சாம்பியன் இல்ல, தோத்தாங்குளி’ என்று கிண்டலடிக்கும் ஊரார் முன்னே மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற்றுக் காட்டும் முரளிகாந்த், பின்னர் பல்வேறு காலகட்டங்களில் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து வெற்றியைச் சூடுகிறார். அதுவே, அவர் உண்மையான சாம்பியன் என்பதை வெளிக்காட்டுகிறது.

செறிவான உள்ளடக்கம்!

ராணுவ வீரராகப் பயிற்சி பெறுவது, குத்துச்சண்டை போட்டிகளில் ஆக்ரோஷமாக மோதுவது, பின்னர் கால் செயலிழந்த நிலையில் பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்பது, முதுமையின் தள்ளாட்டத்திலும் தன்னைச் சார்ந்தவர்களின் நலனை முன்னிறுத்துவது என்று வெவ்வேறுபட்ட நிலைகளில் காட்சியளிக்கிறார் கார்த்திக் ஆர்யன். அவரது திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படம். அதனை உணர்ந்து உடல் மெலிந்து காணப்படுவது, கட்டுடலோடு காணப்படுவது, உடல் தளர்ந்திருப்பது என்று தன்னையே வருத்திக் கொண்டு, திரையில் அப்பாத்திரமாக வெளிப்பட்டிருக்கிறார்.

‘காக்கிசட்டை’ படத்தில் வில்லனாக வந்த விஜய் ராஸ், ‘அயோத்தி’யில் வந்த யஷ்பால் சர்மா ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள். ‘மே மாதம்’ பட நாயகி சோனாலி குல்கர்னி இதில் பத்திரிகையாளராகத் தலைகாட்டியிருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து புவன் அரோரா, ராஜ்பால் யாதவ், கணேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் தல்பாதே, பாக்யஸ்ரீ போர்ஸே உட்படப் பெருங்கூட்டமே திரையில் தலைகாட்டியிருக்கிறது.

ஜுலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசையும், பிரீதம் இசையில் அமைந்த பாடல்களும், திரைக்கதையில் நிறைந்திருக்கும் உண்மை நிகழ்வுகளில் இருந்து விடுவித்து சிறிது நேரம் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவு, நிதின் பெய்த்தின் படத்தொகுப்பு, கோர்காங்கர் தேஜாஸின் கலை வடிவமைப்பு, கபீர் கான் உடன் இணைந்து சுமித் அரோரா மற்றும் சுதீப்தோ சர்கார் அமைத்துள்ள திரைக்கதை வசனங்கள், படத்தின் டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து இப்படத்தின் உள்ளடக்கத்தினைச் செறிவானதாக உணரச் செய்கின்றன.

அனைத்துக் கலைஞர்களின் பங்களிப்பையும் ஒருங்கிணைத்து, திரையில் முரளிகாந்தின் வாழ்க்கை விரிய வழி வகுத்திருக்கிறார் இயக்குனர் கபீர் கான்.

பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள், ராணுவ வீரர்களுக்கான குத்துச்சண்டை விளையாட்டு, அறுபதுகளில் இருந்த ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம், அப்போதைய ராணுவப் பயிற்சி நிலையங்கள், அக்காலகட்டத்து கிராமங்கள் என்று ஒரு ‘கிளாசிக்’ உலகத்தை நம் கண் முன்னே காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அவர் தந்திருக்கும் காட்சியாக்கமே, ‘சந்து சாம்பியன்’னை சிறப்புமிக்கதாகக் கருதத் தூண்டுகிறது.
லாஜிக் சார்ந்த குறைகளை இப்படத்தில் தேடத் தேவையில்லை. ஏனென்றால், இது ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக் கதையாக அமைந்துள்ளது.

அதேநேரத்தில், அந்த வாழ்வை முழுமையாக உணரும் விதமாகத் திரையில் கதை மெல்ல விரிகிறது. வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களில் நாம் பார்க்கிற வேகம், இதில் நிச்சயமாகத் தென்படாது. அதையும் மீறி, விளையாட்டுப் போட்டிகள் சார்ந்த காட்சிகள் நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கின்றன.

இந்தப் படத்தில் ஆபாசம், வன்முறை நிறைந்த சித்தரிப்புகள் கிடையாது. போலவே, தோல்விகளில் இருந்து உயிர்த்தெழுந்து வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்கு ஏற்ற வாழ்வு காட்சிகளாகவும், வசனங்களாகவும் இதில் இடம்பெற்றுள்ளன. நல்லதொரு ஸ்போர்ட்ஸ் பயோகிராஃபி படமாக இது நிச்சயம் இருக்கும்;  இளைய தலைமுறைக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

ஆதலால், இந்த படத்தினைத் தாராளமாகக் குழந்தைகளை அழைத்துச் சென்று குடும்பமாகக் கண்டுகளிக்கலாம். நம்மில் பலர் அறியாத முரளிகாந்த் பேத்கர் எனும் சாதனையாளரின் வாழ்வை அறியவும் கொண்டாடவும் செய்யலாம். ‘சந்து சாம்பியன்’ அந்த அனுபவத்தில் எந்தக் குறையும் வைக்காது. போலவே, கபீர் கான் மற்றும் படக்குழுவினர் இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக் குழுவின் கவனத்தையும் கண்டிப்பாகக் கவர்ந்திழுப்பார்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel