மைனாரிட்டி பாஜக… வெயிட் அண்ட் சீ மோடி: ஸ்டாலின் சேலஞ்ச்!

Published On:

| By Selvam

திமுகவின் முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தவாக தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது,

“கடந்த முறை கோவையில் நான் கலந்துகொண்ட கூட்டம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. எட்டு முறை தமிழகத்திற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து குளோஸ் செய்து விட்டார்.

சகோதரர் ராகுலுடைய அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கியது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தல் முடிவுகளை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாற்பதும் நமதே என்று முழங்கினேன். இது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இந்த நம்பிக்கைக்கான அடித்தளம் கொள்கைக்காக இங்கு கூடியிருக்கிற நீங்கள் தான். நமது வெற்றிக்காக உழைத்த திமுக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தொண்டர்களுக்கும் நன்றி.

இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் விழா அல்ல, இந்த மேடையில் இருக்கும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றியை தலைவர் கலைஞர் பெற்றுத் தந்தார். 2004 கருத்து கணிப்புகளில் மத்திய அளவில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொன்னார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணி தான் ஆட்சியை கைப்பற்றியது.

இப்போதும் அதே மாதிரி தான். பாஜக 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால் நாம் அதை மாற்றியுள்ளோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை, அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு தலைவணங்க வைத்துள்ளோம்.

இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றுசேராது என்று பாஜக நினைத்தது. ஆனால், இந்தியா கூட்டணி ஒற்றுமையை கண்டு பாஜக அதிர்ச்சி அடைந்தது. இதனால் ஒவ்வொரு கட்சிகளையும் ஐடி, இடி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்கினார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்தார்கள்  .

இவ்வளவு செய்தும் பாஜக 240 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இந்த 240 என்பது மோடியின் வெற்றி அல்ல, மோடியின் தோல்வி.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகிய இருவரும் ஆதரவு தராவிட்டால், மெஜாரிட்டி ஏது? அவர்களால் தான் மோடி இப்போது பிரதமராக உட்கார்ந்திருக்கிறார்.

நாம் நம்பிய அரசியல் சாசனமும், ஜனநாயகமும் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. 237 உறுப்பினர்கள் பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறோம். பாஜக நினைத்ததையெல்லாம் இனி செய்ய முடியாது.

இப்போது கூட தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று சில அதிமேதாவிகள் கேட்கிறார்கள். அவர்களெல்லாம் யார் என்று பார்த்தால், தங்களை தாங்களே அறிவாளியாக நினைத்துக்கொள்பவர்கள். ஜனநாயகத்தினுடைய அடிப்படை தெரியுமா அவர்களுக்கு?

இப்படி கேள்வி கேட்டு நாட்டு மக்களை தான் அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு 40 பேர் சென்று கேண்டீனில் வடை சாப்பிட போகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்.பி-க்கள் கருத்துக்களால் உங்கள் ஆணவத்தை சுடுவார்கள்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் திமுகவை எதிர்த்து தான் அதிகம் பேசியிருக்கிறார்கள்.

பாஜகவுக்கு அதிகம் பெரும்பான்மை இருந்தபோதே தங்களுடைய வாதங்களால் நாடாளுமன்றத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்கள் நம்முடைய தமிழக எம்.பிக்கள். இப்போது மைனாரிட்டி பாஜக இருக்கும் போது அடங்கி போவார்களா? மக்களுக்கான நம்முடைய குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கப்போகிறது” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக புறக்கணிப்பு…கடும் போட்டியை சந்திக்கும் திமுக

தாம்பரம் டூ ராமநாதபுரம்: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share