நாகையில் இன்று (செப்டம்பர் 20) தனது இரண்டாவது பிரச்சாரத்தை தொடங்கினார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
அண்ணா சிலை பகுதியில் கூடியிருந்த மக்களுக்கு நடுவே பிரச்சார வாகனத்தில் நின்று பேசிய விஜய் நாகப்பட்டினத்தின் நிலை குறித்து பேசினார்.
அப்போது அவர், “இங்கிருக்கும் மண் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்கும்.
கடலோர கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் அழிவதை தடுத்து நிறுத்தி அதற்கொரு வழி ஏற்படுத்த வேண்டிய அரசாங்கத்துக்கு இதை விட ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அது, சொந்த குடும்பத்தோட வளர்ச்சியும், சொந்த குடும்பத்தோட சுயநலமும் தான்.
இங்கிருக்கக்கூடிய மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். கொண்டு வந்தார்களா?
வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை என இங்கிருக்கக்கூடிய சுற்றுலா தளங்களை மேம்படுத்தலாம். மேம்படுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.
வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்கலாம்.. செய்து கொடுத்தார்களா?
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க டாக்டரே இல்லையாம்.
நாகப்பட்டினம் புது பேருந்து நிலையத்தையாவது சுத்தமாக சுகாதாரமாக வைத்திருக்கிறார்களா?
நாகப்பட்டினம் ரயில் நிலைய வேலையை வேகமாக முடித்து வைக்கலாம்… அதையாவது செய்தார்களா.
இங்கே ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோல் மில்லையும், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையும் மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறந்தால் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதைபற்றி ஏன் யோசிக்கவில்லை.
மேலக்கோட்டைவாசல் மேம்பாலம் கட்டி 50 வருடங்கள் ஆகிறது. அந்த மேம்பாலத்தை சரி செய்தார்களா.
தஞ்சாவூர் நாகப்பட்டினம் ரோடு வேலை பல வருடமாக நடக்கிறது. அதை வேகப்படுத்தி முடித்திருக்கலாம். அதையாவது செய்தார்களா?
ரொம்ப முக்கியமாக மழை காலத்தில் நெல் மூட்டைகள் எல்லாம் நனைந்து வீணாகிறது. விவசாயிகள் கவலைப்படுகின்றனர். அதற்கு சரியான ஒரு குடோன் கட்டி கொடுக்கலாம். அதையாவது செய்தார்களா.
தேர்தலுக்கு முன் செய்வோம். செய்வோம் என்று சொன்னார்களே செய்தார்களா. என்னவோ எல்லாம் செய்தது போலவே பேசுவார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.