தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் 2 கப்பல் கட்டும் தளங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

Published On:

| By christopher

2 MoUs for worldclass Greenfield commercial shipyards in TN

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் சமீபத்தில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று (செப்டம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ரைசிங் தூத்துக்குடி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் கப்பல் கட்டுதலை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரத்யேக நிறுவனத்தை அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்த மாத தொடக்கத்தில், வரவிருக்கும் முதல் தமிழ்நாடு கடல்சார் போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025 இன் பின்னணியில், மாநிலத்தில் கப்பல் கட்டும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக ஒரு சிறப்பு நோக்க திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் SIPCOT மற்றும் VoC துறைமுகம் கையெழுத்திட்டன.

இன்று, ரூ.30,000 கோடி முதலீட்டில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தமிழ்நாட்டில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த பசுமைக் கள வணிகக் கப்பல் கட்டும் தளங்களை நிறுவ கப்பல் கட்டும் துறையில் இரண்டு அல்ட்ரா மெகா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ. 15,000 கோடியை முதலீடு செய்யும், இதன் மூலம் முதல் கட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும்.

மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட், ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும். இது 45,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும்.

கடல்சார் துறையை மாற்றும் புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற விழாவில் கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வைக் குறிக்கின்றன.

இந்த இரண்டு அல்ட்ரா மெகா திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டும் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவாவதைக் குறிக்கிறது. இந்தத் துறையில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கான இதுவரை இல்லாத வாய்ப்புகளைத் திறக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share