நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் விதிமுறைகளை மீறியதாக தமிழகத்தின் 64 கட்சிகள் உட்பட 808 கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29ஏ-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அதன்படி பதிவு செய்த கட்சிகளுக்கு, வருமான வரி விலக்கு, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு, பொது சின்னம் ஒதுக்கீடு ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நம் நாட்டில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர 3,000 சிறிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இருந்தன.
இந்நிலையில் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்காத நாடு முழுவதும் உள்ள கட்சிகளுக்கு அதன் பதிவு உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி, விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித தேர்தலில் போட்டியிடாதது மட்டுமின்றி, தேர்தலில் போட்டியிட்டாலும் வருடாந்தர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கடந்த 3 ஆண்டுகளாக (2021-22, 2022-23, 2023-24) உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்காத மற்றும் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாத கட்சிகள் என்ற அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி 2025 ஆகஸ்ட் 9 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் உட்பட 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது.
அதனைத் தொடர்ந்து 2வது கட்டமாக கடந்த 19ஆம் தேதி நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி கொங்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், பச்சைத் தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் பெருந்தலைவர் மக்கள் கட்சி உட்பட 42 கட்சிகள் அடங்கும்.
இதன்மூலம் கடந்த மாதங்களில் நாடு முழுவதும் இதுவரை பதிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 808ஆக உயர்ந்துள்ளது.
இவை தவிர 3வது கட்டமாக கடந்த 2021ஆம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 39 கட்சிகள் உள்ளன.
