அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையனின் இந்த முயற்சி குறித்து இன்று (செப்டம்பர் 5) தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொடங்கிய நாளில் இருந்தே இந்த இயக்கத்துக்காக அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார் செங்கோட்டையன்.
பல்வேறு சூறாவளி, சுனாமிகள் வந்த போதும் நிலையாக நின்று இந்த இயக்கத்துக்காக அனைவரையும் அரவணைக்கும் நோக்கோடு அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.
கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருங்கிணைத்தால் தான் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதால் தனது மனதின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார்.
அவரது எண்ணம் நிறைவேறுவதற்கு வாழ்த்துகள். அதற்காகத்தான் நாங்களும் போராடிக்கொண்டிருக்கிறோம்.
அதிமுக சக்திகள் பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டு பல்வேறு சூழ்நிலைகளை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம்.
கட்சி பிரிந்த நாளில் இருந்து எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.
அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களை வெளியேற்ற முடியாது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று யார் சொன்னாலும் நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.