ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! : செங்கோட்டையனை தொடர்ந்து சசிகலா

Published On:

| By Kavi

அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்பதாக சசிகலா கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியுள்ளார். இதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடு கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

செங்கோட்டையனின் இந்த முயற்சியை வரவேற்றுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!

ADVERTISEMENT

அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் பேரியக்கம்.

இது ஏழை எளிய சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். ஜெயலலிதா குளுரைத்ததுபோல் “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.

ADVERTISEMENT


அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கட்சியின் மூத்த முன்னோடியும் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார்.

பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிருபித்துள்ளார்.

கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டனின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.


செங்கோட்டையனை போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது.

திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி, கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும் செறுக்கோடும் மிளிரும்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share