அதிமுகவில் கலகம்.. மனம் திறந்த செங்கோட்டையன்.. ஒரே ஒரு வேண்டுகோள்தான்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan insists that AIADMK should be unified

பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேசி உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் – 5) மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். மேசையில் முன் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வணங்கிய பின் அவர் பேசுகையில், “அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார். நாடே வியக்கத்தக்க செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்தார்.

ADVERTISEMENT

1973 ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வந்த போது 2,37,000 வாக்குகள் பெற்று மாயத்தேவர் வெற்றி பெற்றார். பின்னர் கோவையிலும், மருங்காபுரி இடைத்தேர்தல்களிலும் வெற்றியை ஈட்டி தந்தார்.

1975ல் கோவையில் நடந்த பொதுக்குழுவில் அரங்கநாயகம் தலைவராகவும், திருப்பூர் மணி மாறன் செயலாளராகவும், என்னை பொருளாளராகவும் நியமித்து புரட்சித் தலைவர் சார்பில் எனக்கு ஆணை வழங்கப்பட்டது. பொதுக்குழுவை நாங்கள் நடத்தியதை பார்த்து சத்யா ஸ்டூடியோவிற்கு அழைத்து புரட்சி தலைவர் எங்களை பாராட்டினார்.

ADVERTISEMENT
என் பெயரை உச்சரி

அதன் பின் 1977ல் நான் கோபிச்செட்டிபாளையத்தில் போட்டியிட நினைத்தபோது புரட்சி தலைவர் நீ சத்தியமங்கலத்தில் நின்று விடு என்றார். சத்தியமங்கலம் புதிய தொகுதி நான் எப்படி போட்டியிட முடியும் என்று கேட்டதற்கு என் பெயரை உச்சரி நீ வெற்றி பெறுவாய் என்றார்.

நான் எதற்காக இதை சொல்கிறேன் என்றால் எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் அதிமுகவில் இருந்து விலகியபோது, அவர்களது இல்லத்திற்கே சென்று புரட்சி தலைவர் என்னோடு இணைந்து வாருங்கள். தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, தமிழகத்தை பேணிக்காக்க நீங்கள் கட்சியிலேயே இருக்க வேண்டும் என அழைத்தார்.

ADVERTISEMENT

புரட்சி தலைவரை பொறுத்தவரை மாமேதையாக நாடே போற்றுகிற தலைவராக மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்ட தலைவராக விளங்கினார். 10 ஆண்டுகள் சிறந்த ஆட்சியை தந்த தலைவர் இந்தியாவே வியக்க தக்க அளவிற்கு ஏழை மக்களின் பசி பிணியை போக்கி, குழந்தைகளுக்கு சத்துணவை வழங்கி இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். புரட்சி தலைவர் மறைவிற்கு பிறகு புரட்சி தலைவி அம்மா பொறுப்பேற்றார்.

நாங்கள் எல்லோரும் தலைவருக்கு பிறகு இந்த இயக்கத்தை வழி நடத்த ஒரு ஆளுமை உள்ள தலைமை, மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைமையாக நீங்கள் வர வேண்டும் என புரட்சி தலைவி அம்மாவை அணுகினோம்.

சமூக நீதி காத்த வீராங்கனை

புரட்சி தலைவி அம்மா சிறந்த ஆட்சியை தமிழகத்தில் தந்தார்கள். 5 முறை சிறந்த ஆளுமை மிக்க முதலமைச்சராக இருந்து ஏழை மக்களின் இதயங்களிலும், படித்த இளைஞர்களிடத்திலும் போற்றப்படும் தலைவராக விளங்கினார்.

ஆன்மீகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்கிற ஒரு தலைமையாக புரட்சி தலைவி அம்மா விளங்கினார். இதை தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் அளவிற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களே சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் வழங்கினார்.

2016ல் அம்மா வெற்றி வாகை சூடி ஓராண்டில் மறைந்தார். இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்தபோது அந்த சோதனையில் அன்றைக்கு எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்து விட கூடாது. இயக்கதை பேணிக்காக்க வேண்டும் என சசிகலாவை ஒரு மனதாக நாங்கள் நியமித்தோம். அதன் பிறகு காலச் சக்கரங்கள் சுழன்று மீண்டும் முதலமைச்சர் யார் என்ற நிலை வந்த போது முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவர் முன்மொழிந்தார்.

ஆனால் பல சோதனைகள் வந்தபோதும் தடுமாற்றம் இல்லாமல், நான் இந்த இயக்கத்திலே பல்வேறு பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன் என்று புரட்சி தலைவி அம்மா ஆடியோ, நிகழ்ச்சிகளின் மூலம் என்னை பாராட்டியது அனைவருக்கும் தெரியும்.

ஒரு தேசம் எப்படி இருக்க வேண்டும், தமிழகம் எப்படி இருக்க வேண்டும், தமிழகத்தில் வாழும் மக்கள் எப்படி இருக்க வேண்டும், இந்த இயக்கத்தில் வாழும் தொண்டர்கள் மகிழ்ச்சியோடு வாழ எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருந்தேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போது கூட இந்த இயக்கம் உடைந்து விட கூடாது என்ற நோக்கத்தில் தான் நான் பணியாற்றினேன்.

எதிர்காலத்தில் புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மாவின் நல்லாசியோடு, இந்த இயக்கம் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்ற வகையில் எல்லோரும் ஒன்றிணைந்து அந்த பணிகளை மேற்கொண்டோம்.

2016க்கு பிறகு தொடர்ந்து நாம் தேர்தலை சந்திக்கிறோம். தேர்தல் களம் எவ்வளவு போராட்ட களமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

புரட்சிதலைவி பற்றி காளிமுத்து, கண்ணதாசன் போன்றோர் பேசிய வார்த்தைகள் இன்றும் தொண்டர்கள் மனதில் முள் குத்துவது போல் உள்ளது. ஆனாலும் புரட்சி தலைவி அம்மா எல்லோரையும் அரவணைத்து பாசத்தோடு 1991ல் சட்ட மன்றத்தில் மனம் விட்டு பேசியது இன்றும் சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது.

2017க்கு பின் தொடரும் தோல்வி

2017ல் ஆட்சியில் அமர்ந்தோம். பின்னர் 2019 தேர்தல், 2021 தேர்தல், 2024 தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை நாம் சந்திக்கும் போது களத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்று இருக்க கூடும். வேலுமணி கூட ஒரு முறை இந்த கருத்தை வெளிப்படுத்தினார். தேர்தலுக்கு பின் கழக பொதுச் செயலாளரை சந்தித்து கழகத்தை ஒன்றிணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி சண்முகம் ஆகியோருடன் நானும் இணைந்து பொதுச் செயலாளரிடம் வலியுறுத்தினோம்.

நமது தலைவர்கள் நமக்கு கற்று தந்த பாடம்

அவரை பொறுத்தவரையில் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மறப்போம்.. மன்னிப்போம் வெளியில் சென்றவர்களை அரவணைத்தால் தான் இந்த தேர்தல் களத்தில் வெற்றி பெற இயலும். இது நமது தலைவர்கள் நமக்கு கற்று தந்த பாடம்.

2010ல் நாம் டெபாசிட் இழந்ததற்கு பிறகு கோவையில் நடந்த கூட்டத்தில் கோவை குலுங்கியது.. மதுரை நடுங்கியது.. திருச்சி திரும்பியது என 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அன்றைக்கும் கூட்டணி வலிமையாக வேண்டும். வெளியே சென்றவர்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தான் தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து ராஜ தந்திரத்தோடு அம்மா வெற்றி பெற்றார் என்ற வரலாறு இருக்கிறது.

அதற்கு பிறகு 2016 தேர்தலிலும் அப்படித்தான் வெற்றி பெற்றார். ஆனால் இன்றைய நிலை அப்படி அல்ல. வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். வெளியில் சென்றவர்கள் எந்த வித கண்டிஷனும் இல்லை. எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். நாட்டு மக்கள் நலன் கருதி உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்கிறார்கள்.

யார் இதை பற்றி சொல்வது என்ற நிலையில் தான் இன்று, உங்களுடன் மனம் திறந்து நான் பேசுகிறேன். இந்த இயக்கம் தான் நமக்கு சகோதர பாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாசத்தோடு வெளியே சென்றவர்கள் ஒன்றிணைக்கபட வேண்டும் அப்படி செய்யும் போது தான் வெற்றி என்ற இலக்கை நாம்மால் எட்ட முடியும்.

எனது வேண்டுகோள் ஒன்றுதான்

தேர்தல் களம் துவங்கி விட்டது. இதனால் 10 நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க முயற்சிக்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களை இணைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மன நிலையில் இருக்கும் நாங்கள் எல்லோரும் முன்னின்று அந்த பணிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனின் இந்த கருத்து அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share