சினிமாவிற்கு மட்டும் செல்லக்கூடாது, சிபிஐ விசாரணைக்கும் சென்றுதான் ஆக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 10) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”பாஜக – அதிமுக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருந்து கொண்டிருக்கிறது. இது முதலமைச்சரின் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். உழைப்பை எல்லாம் பார்க்கும் போது 200 தொகுதிகள் கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் எங்கள் உழைப்பைப் பார்க்கும் போது எங்களுக்கு 210 தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவித்தார். 2026-ல் எங்களது வெற்றி இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு திமுக எல்லா இடங்களிலும் அராஜகம் செய்து கொண்டிருக்கிறது.
சென்சார் போர்டு மத்திய அரசின் கிளையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதல்வர் ட்வீட் செய்கிறார். சென்சார் போர்டு தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம். முதல்வரின் குடும்பமே சினிமா துறையில் இருந்த குடும்பம். அவர்களுக்கு சென்சார் போர்டின் வழிமுறைகள் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே மத்திய அரசைக் குறை சொல்லி முதல்வர் ட்வீட் போடுகிறார். மக்களைத் திசை திருப்ப வேண்டாம்” என்றார்.
பராசக்தி திரைப்படத்தில் அண்ணா வசனங்களைப் பேசுவதால் என்ன வந்து விடப் போகிறது? என்ற கேள்விக்கு, “இந்தக் கேள்விகளை சென்சார் போர்டிடம் போய்க் கேளுங்கள். அரசியல் ரீதியான கருத்துக்கள் இருந்தால் அதை மியூட் செய்வார்கள், தவறான கருத்துக்கள் இருந்தால் எடுக்கச் சொல்வார்கள். நான் நாளை படம் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்” என்றார்.
காஷ்மீரில் மருத்துவக் கல்லூரி மூடப்படுவது குறித்த கேள்விக்கு, “ஒயிட் காலர் டெரரிசம் போல ஒயிட் கோட் டெரரிசம் பரவி வருவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்திருக்கிறார். அங்கு தீவிரவாத நடவடிக்கைகள் இருப்பதால் மூடியிருப்பார்கள். அங்குள்ள மாணவர்களுக்கு வேறு இடங்களில் இடம் கொடுப்பார்கள்” என்றார்.
மேலும் “2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். அதற்கு கடுமையாக உழைக்கத் தயார். நாங்கள் 210 தொகுதிகளைத் தாண்டி வெல்வோம். திமுகவால் கருத்தியல் ரீதியாக பாஜகவை எதிர்கொள்ள முடியவில்லை. கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள், கலாட்டா ரீதியாக எதிர்கொள்ளக் கூடாது என்பதை முதல்வர் அறிவுறுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
சட்ட விதிகள் படி விஜய் சிபிஐ விசாரணைக்கு சென்றுதான் ஆக வேண்டும். சினிமாவிற்கு மட்டும் போகக் கூடாது, சிபிஐ விசாரணைக்கும் போய்தான் ஆக வேண்டும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு எது நடக்குமோ அது நடக்கும்” எனத் தெரிவித்தார்.
