பராசக்தி படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று (ஜனவரி 10, 2026) வெளியாகியுள்ளது.
1965-ல் பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்புப் போரின் போது 250 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மறைக்கப்பட்ட வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், தணிக்கை வாரியத்தின் உத்தரவுப்படி 52 இடங்களில் வசனங்கள் மியூட் (மௌனமாக்கப்பட்டு) செய்யப்பட்டுள்ளன. மேலும் 27 இடங்களில் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, “இங்கு யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்பதுதான் பொருள்” என்று தொடங்கும் 22 வினாடி வசனம் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில், U/A சான்றிதழ் பெற்று படம் இன்று வெளியானது.
திரைப்படம் குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ் திரை உலகின் மூத்த நடிகரும், ராஜ்ய சபா உறுப்பினருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்த் தீ பரவட்டும்!
அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்.
பின்குறிப்பு: பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது. உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோ ஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் திருமதி சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.
இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்.” என்று தெரிவித்துள்ளார்.
