மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 10) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல், பல்வேறு மாநிலங்களில் சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படாவிட்டால், எதிர்பாராத சமூகப் பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளதால், இக்கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் துல்லியமாகவும், தெளிவானதாகவும் இருக்கும்பட்சத்தில் மட்டுமே, பொது நம்பிக்கையை உறுதி செய்திட முடியும், இல்லாவிடில், இந்த அம்சங்களில் ஏதேனும் குறைபாடுகள், சர்ச்சைகள், துல்லியமின்மை அல்லது பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கக்கூடும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்தாலும், அதன் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும் என்பதால் இப்பணி தொடர்பான வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன்பாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும்.
இத்தகைய ஆலோசனை, இந்த முக்கியமான செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்கவும், குறிப்பிட்ட நுணுக்கங்களைக் கணக்கிடவும், கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும்.
எனவே,
1. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்திட மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்க வேண்டும்.
2. இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும்.
இந்தியப் பிரதமரின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
