கரூரில் 41 பேர் பலியான துயரம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ முன்பாக விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை ஜனவரி 12-ந் தேதி ஆஜராகிறார்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இத்துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள், கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் தவெக மா.செ. மதியழகன், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போது, கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் டெல்லி விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கரூருக்கு விஜய்யின் பிரசார பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் ஏறி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் டெல்லியில் நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து விஜய் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு நாளை ஆஜராகிறார். இதற்காக தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்.
இது தொடர்பாக சிபிஐ வட்டாரங்களில் நாம் கேட்ட போது, ”விஜய்யிடம் கேட்பதற்கான கேள்விகள் தயாராக இருக்கின்றன. விஜய்யிடம் முதலில் கேள்விகளை கேட்டு பதில்களைப் பெறுவோம். பின்னர் தேவைப்படும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகவும் பதில்களை எழுதி வாங்குவோம்” என்றனர்.
விஜய்யிடம் எத்தனை நாள் விசாரணை நடத்தப்படும் என நாம் கேட்ட போது, “குறைந்தது 2 நாட்கள் விசாரணை நடத்தப்படும்.. விஜய் ஒத்துழைப்பு தருவதைப் பொறுத்துதான் எத்தனை நாட்கள் என்பது தெரிய வரும்” என்றனர்.
மேலும், விஜய்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேட்ட போது, “விஜய் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கான பாதுகாப்பை அவர்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும். சிபிஐ, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாது” என்றனர்.
