நாகை, திருவாரூர் பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (செப்டம்பர் 20) காலை புறப்பட்ட விஜய், திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த வாரம் திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதற்காக சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று காலை 8.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜய், திருச்சி விமான நிலையத்தை 9.35 (40 நிமிடங்கள்) மணிக்கு சென்றடைந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து நாகை நோக்கி காரில் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த முறையில் திருச்சியில் தவெக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டதால் விஜய்யின் வாகனம் அவரது பயணம் முழுவதும் ஊர்ந்துதான் சென்றது.
இதனையொட்டி ஏற்கெனவே தொண்டர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் விமான நிலையத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மேலும் அதனை மீறி வந்த தொண்டர்களும் விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டுள்ள நாகை அண்ணா சிலை சந்திப்பு அருகில் நண்பகல் 12.30 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.