நாட்டின் மிக நீண்டகால மத்திய உள்துறை அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அமித்ஷா (Union Home Minister Amit Shah) .
குஜராத் மாநில அரசியலில் இரட்டையர்களாக இருந்த மோடி, அமித்ஷா இருவரும் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவின் தேசிய முகங்களாக; மத்திய அரசின் முதன்மை முகங்களாகினர்.
2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த போது, உள்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பதவி வகித்தார். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மே 29- ந் தேதி வரை ராஜ்நாத்சிங் பதவி வகித்தார்.
2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி முதல் நாட்டின் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் அமித்ஷா. அமித்ஷா இன்றைய நிலையில் 2,258 நாட்கள் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்தியாவிலேயே இவ்வளவு நீண்டகாலம் பதவி வகித்த முதல் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்.
1998-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி முதல் 2004-ம் ஆண்டு மே 22 வரை எல்.கே. அத்வானி, 2,257 நாட்கள் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அத்வானிக்கு முன்னர் 2,248 நாட்கள் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ஜிபி பந்த். தமிழ்நாட்டின் ப.சிதம்பரம், 1,340 நாட்கள் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல், 1218 நாட்கள் பதவி வகித்தார்.
டெல்லியில் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அமித்ஷாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
