கலைஞர் 7-ம் ஆண்டு நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Published On:

| By Mathi

Kalignar Chennai Rally

திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்- தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் (Kalaignar) 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி உணர்வெழுச்சியுடன் நடைபெறுகின்றன. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் கலைஞர் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி நம்மை விட்டு பிரிந்தார். கலைஞர் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்கள், நகரங்களில் இன்று காலை முதல் உணர்வுப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை வாலஜா சாலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணியில் தமிழக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

இப்பேரணியில் “வீரவணக்கம்! வீரவணக்கம்! முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு வீரவணக்கம்!” என உணர்வுப்பூர்வமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் நிறைவில் மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

கலைஞர் நினைவு நாளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!

ADVERTISEMENT

கலைஞர் நினைவு நாளில் கவிப்பேரரசு வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:

புகழப்படுவதற்கோ
இகழப்படுவதற்கோ
உயிர்ப்போடு திகழவேண்டும்
ஒரு பொருள்

இறந்த பிறகும்
நீ புகழப்படுகிறாய்
மற்றும்
இகழப்படுகிறாய்

என்ன பொருள்?

உன்னதப் பொருளாக
இன்னும் நீ
உயிர்ப்போடு திகழ்கிறாய்
என்று பொருள்

இரு இப்படியே

இறந்த பிறகும்
உனக்கு
இறப்பில்லை உயிர்ப்பே!

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி பதிவு: எழுதும் பேனாவில் தொடங்கி, வாசிக்கும் புத்தகம், முழக்கமிடும் போராட்டக் களம், உரை நிகழ்த்தும் நாடாளுமன்றம், தினம் எதிர்ப்படும் மக்கள் என எங்கு காணினும் தென்படும் உங்கள் முகமே! கருத்தாய், கண்மணியாய், கொள்கைக் குன்றாய், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய், நீங்காத நிழலாய், நெஞ்சுக்கு நிகரான உயிராய், உயிரினும் மேலான தலைவராய் எங்களுள் நீக்கமற நிறைந்து நிற்கும் முத்தமிழறிஞரே நீங்கள் காட்டிய சமூகநீதிப் பாதையில் ஆயிரம் ஆயிரமாய் அணிவகுத்திடுவோம்! எல்லார்க்கும் எல்லாம் என்பதை வென்றெடுத்திடுவோம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share