“கடுமையான விதிமீறல்” – ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Published On:

| By Kavi

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று (பிப்ரவரி 29) தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி ஆலை செயல்பட்டதாகவும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக்கசிவுகளால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

ஆனால், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது சரிதான்” என்று 2020ல் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து, அந்த குழுவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

“நிபுணர் குழுவை அமைப்பதற்கான அவசியம் என்ன? ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தி 800 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஸ்டெர்லைட் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மாசு ஏற்பட்டதால் ஆலை மூடப்பட்டது.

பல்வேறு  பரிந்துரைகள் வழங்கியும், அதை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்கவில்லை. உரிய விதிமுறைகளை அந்நிறுவனம் பின்பற்றவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய அனுமதி இல்லாமலும், உரிமங்களை புதுப்பிக்காமலும் இந்த ஆலை செயல்பட்டு வந்தது” என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

“மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்திருந்தது உறுதியாகியுள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் இருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான காப்பர் ஸ்லாக்குகள் ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தில் காண்பித்து மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டார்.

வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு அறிவியல் ரீதியிலான தரவுகளை முன்வைத்தும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

“ஸ்டெர்லைட் ஆலை மீண்டும், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டு வந்துள்ளது. கடுமையான விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆலை தொழில்துறைக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது, வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது என்றாலும் சூழலியல் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆலையை சுற்றி வசிக்கும் மக்களின் உடல்நிலையையும் கருத்தில் கொள்வது அவசியம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் மீண்டும் மீண்டும் நடந்த விதிமீறல்கள், ஆலை மூடப்பட்டதை நியாயப்படுத்துகிறது. 2013 முதல் பல வாய்ப்புகளை கொடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற தவறிவிட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தனது கடமையை முழுமையாக செயல்படுத்த அக்கறை காட்டவில்லை. விதிமுறைகளை மீறி ஆலை செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது” என்று கூறி வேதாந்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின். “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!

எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி, “ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக, இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டிடும் தீர்ப்பு வந்திருக்கிறது. தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு.

இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக வழிகாட்டும் விதமாக மக்களுடன் நின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இறுதிக்கட்டத்தினை எட்டிய ‘புரோ கபடி’ வெற்றி மகுடம் யாருக்கு?

பா ரஞ்சித்துடன் இணைந்த ஜிவி பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share