கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய 10-வது புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.
நேற்றிரவு (பிப்ரவரி 29) ஹைதராபாத்தின் கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தானை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனேரி அணி 2 முறை பாட்னாவை ஆல் அவுட் செய்ததுடன், 37-21 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியும் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புனே அணியானது தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. புனேவை பொறுத்தவரை அதிகபட்சமாக கேப்டன் அஸ்ஸாம் முஸ்தபா, பங்கஜ் மொஹித் இருவரும் தலா 7 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஹரியானா ஸ்டீலர்சுடன் மல்லுக்கட்டியது. இந்த மோதலில் முதல் பாதியில் இருந்தே ஹரியானாவின் கை ஓங்கி இருந்தது (19-21 புள்ளிகள்). ஆட்டத்தின் பிற்பாதியில் சரிவில் இருந்து மீள்வதற்கு ஜெய்ப்பூர் அணி கடுமையாக போராடியது. என்றாலும் அதற்கு தகுந்த பலன் கிட்டவில்லை.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹரியானா 31-27 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூருக்கு தோல்வியை பரிசாக அளித்து, முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை (மார்ச் 1) இரவு 8 மணிக்கு நடக்கும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் புனேரி – ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிவாகை சூடி கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
-கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடிக்கு தோல்வி பயம்: ஸ்டாலின் தாக்கு!
சீனா கொடி சர்ச்சை : அனிதா ராதா கிருஷ்ணன் பதில்!