‘விஜய் மேடை ஏறலாம்.. வசனம் பேசலாம்..’ வானதி சீனிவாசன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay vs Vanathi

விஜய் மேடை ஏறலாம், வசனம் பேசலாம், கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம். புது புது வார்த்தைகளை வைத்துப் பேசினாலும், அல்டிமேட்டாகத் திமுகவை வீழ்த்தப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பெண்கள் பலரும் கந்த சஷ்டி கவசம் துதித்து, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என நேற்று (பிப்ரவரி 23) மாலை வேண்டிக் கொண்டனர்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மாநில அரசு நிறைவேற்றாமல் இருக்கிறது என்றார். எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று பொய்க் காரணத்தைக் கூறி தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

ADVERTISEMENT

தமிழகம் எப்போதும் தெய்வீக மண். நம்முடைய கோவில்களும் கலாச்சாரமும் தான் தமிழர்களின் அடையாளம். தமிழ்நாடு சின்னமும் கோபுரம் தான்.அந்த கோபுரம் என்பது ஒரு கோவிலின் அடையாளத்தைத் தாண்டி தமிழகத்தின் அடையாளமாக இருக்கிறது.

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுகவினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும், இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் கூடாது என்பது தான். அது அவர்களின் ரத்தத்தில் ஊறியது. ஆட்சி அதிகாரத்தில் செய்ய முடியாததை கூட ஆண்டவனிடம் முன்வைக்கின்ற பிரார்த்தனை என்பது செய்து முடிக்கும் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆன்மீக நம்பிக்கையை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ADVERTISEMENT

விஜய் இன்று திமுக பற்றி விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு, “விஜய் புது புது வார்த்தைகளை வைத்துப் பேசினாலும், அல்டிமேட்டாகத் திமுகவை வீழ்த்தப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான். மேடை ஏறலாம், வசனம் பேசலாம், கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம். ஆனால் வாக்குகள் விழுவது தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தான். ஏனென்றால் திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தான் உள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share