விஜய் கையில் இருக்கும் ரிமோட்டில் பேட்டரி இருக்கிறதா? – டி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜய் பிளாக்கில் டிக்கெட் விற்றதைத் தவிர இதுவரை நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்?’ என டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

வேலூரில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு திமுக செய்தித் தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில்,”முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக 5 ஆண்டுகள், துணை முதலமைச்சராக 5 ஆண்டுகள், தற்போது முதலமைச்சராக 5 ஆண்டுகள் பணியாற்றி மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளார்.

ADVERTISEMENT

முதலமைச்சர் கொண்டு வந்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மக்களுக்கான போராட்டத்தில் மிசா சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தவர் அவர். ஆனால், நேற்று வரை சினிமாவில் நடித்துவிட்டு, தற்போது சினிமா வாய்ப்பு குறைந்ததால் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் வந்திருக்கும் ஒருவருக்கும், மக்கள் மனதில் இடம் பிடித்த தலைவருக்கும் இடையே எவ்விதப் போட்டியும் இல்லை. ‘ விஜய் பிளாக்கில் டிக்கெட் விற்றதைத் தவிர இதுவரை என்ன செய்திருக்கிறார்?’ என இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு மீது விஜய் வைக்கும் ஊழல் புகார்கள் பாஜகவின் குரலையே பிரதிபலிக்கின்றன. இதன் மூலம் விஜய் பாஜகவிற்கு ‘அடிமை’ என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாஜக மற்றும் அதிமுகவினர் மீது இன்றும் பல ஊழல் புகார்கள் உள்ள நிலையில், அவர்கள் ஊழலைப் பற்றிப் பேச அருகதை அற்றவர்கள். விஜய் பத்திரிகைச் செய்திகளைக் கூடப் படிப்பதில்லை; சமூக வலைதளங்களைப் பார்த்து மட்டுமே பேசுகிறார். பதவி ஆசையால்தான் அவர் முதலமைச்சரைத் திட்டுகிறார். என்றார்.

ADVERTISEMENT

ஆட்சியின் ‘அட்ராசிட்டியை’ நிறுத்த ரிமோட் தன்னிடம் இருப்பதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, ‘ரிமோட் கையில் இருந்தால் ஸ்விட்ச் ஆஃப் செய்து பார்க்கட்டுமே! முதலில் அந்த ரிமோட்டில் பேட்டரி இருக்கிறதா என்று அவர் சரிபார்க்கட்டும்’ என்றார்.

விஜய் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பேன் என்று கூறுவது குறித்த கேள்விக்கு, ‘நல்லவேளை மக்கள் அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. அவரது வருகையால் மீண்டும் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட வேண்டுமா?’ என்று விமர்சித்தார்.

ADVERTISEMENT

மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உயர்ந்துள்ளது. அடிப்படை பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் கூடத் தெரியாமல் விஜய் பேசிக் கொண்டிருக்கிறார் என டி.கே.எஸ் இளங்கோவன் கடுமையாகச் சாடினார்.”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share