துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
கோவை சூலூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 18) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “துணைக் குடியரசு தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன், வாழ்த்துச் சொன்னேன்” என்றார்.
கோவை விமான நிலையத்திற்கு ஒரு முறை வாஜ்பாய் வந்த பொழுது அவரைக் காண ஏராளமானோர் திரண்டனர், அப்பொழுது கோவை மக்கள் உங்களை பார்க்க விரும்புகிறார்கள் என சிபிஆர் உடன் நானும் பேசினேன். அப்போது வாஜ்பாய் கோவை மக்களை சந்தித்தார். 1998 ம் ஆண்டு அதிமுக- பாஜக- மதிமுக கூட்டணி இருந்த பொழுது கோவை குண்டு வெடிப்பு நடந்து எண்ணற்றவர்கள் மறைந்து பலர் மருத்துவமனையில் இருந்தனர்.
அப்போது கோவை மாநகரமே ஸ்தம்பித்து யாரும் பிரச்சாரத்திற்கு வராமல் வெறிச்சோடி கிடந்த கோவைக்கு நேரடியாக களத்திற்கு வந்து ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியிலே பேசினேன். 3 நாட்கள் இந்த கோவை நாடாளுமன்ற தொகுதியில் திறந்த வேனில் அவருக்காக பிரச்சாரம் செய்தேன். கோட்டைமேட்டிற்கு சென்ற போது போலீசார் நீங்கள் போக கூடாது கல்வீச்சு நடக்கும், கலவரம் நடக்கும் என்ற போதும் பிரச்சாரத்தில் பின்வாங்காத நினைவுகளை பகிர்ந்தார். அந்த தேர்தலில் நல்ல வாக்குகளில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் என தெரிவித்தார்.
நாகலாந்து ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட கூடும் என ஏடுகள் தெரிவித்து வந்த நிலையில் , துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. வீரமும், விருந்தோம்பலும் நிறைந்த கொங்கு பகுதி பிரதிநிதியாக, துணைக் குடியரசு தலைவராக பொறுப்பேற்க இருப்பதற்கு எங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
ராஜ்யசபாவை அவைத் தலைவராக சிறப்பாக வழி நடத்துவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். துணை குடியரசு தலைவர் அடுத்து குடியரசு தலைவராக கூட மாறலாம்” என குறிப்பிட்டார்.
மேலும் கட்சி எல்லைகளைக் கடந்து , தாய் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், நல்ல பண்பாளர், கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரையும் மதிக்க கூடியவர் , துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருப்பதற்கு எங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
அதேசமயம், இந்தியா கூட்டணி யாரை நிறுத்தப் போகிறார்கள்? போட்டியிருக்குமா? என்பதை யூகமாக சொல்ல முடியாது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற, தமிழகத்தில் தலைமை தாங்குகின்ற திமுகவும் தோழமைக் கட்சிகளும் ஆலோசித்து, முதலமைச்சர் மூலமாக அறிவிக்கின்ற அறிவிப்பின்படி மதிமுக துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் நடந்து கொள்ளும் என்றார்.
தமிழக வெற்றி கழகம் மாநாடு, குறித்து பேசுகையில், மற்ற கட்சிகளை போல மாநாடு நடத்துகின்றது . லட்சோப லட்சம் பேர் பங்கேற்ற கூட்டங்களை நான் பார்த்தவன் என்பது உள்ளிட்ட பல கருத்துகளை தெரிவித்தார்.
மல்லை சத்தியாவை மீண்டும் மதிமுகவில் எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் வைகோ கிளம்பினார்.