இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமாரை தகுதி நீக்க வகை செயும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ‘இந்தியா கூட்டணி’ கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொண்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதில், ஆதார் அடையாள அட்டை- வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஏற்காமல் குடியுரிமைக்கான நேட்டிவிட்டி சான்றை கட்டாயப்படுத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் இதனால் 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் அதிர்ச்சி தரும் முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இதனை வாக்கு திருட்டு என்று விமர்சித்து ஏராளமான ஆதாரங்களை வெளியிட்டார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. மேலும் பீகாரில் வாக்குரிமையை உறுதி செய்யும் யாத்திரையையும் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார், ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்திருப்பதுடன் வாக்காளர் பட்டியல் மோசடி புகார்களை ஆதாரமற்றவை என மறுத்து நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்.
இந்த பின்னணியில் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமாரை தகுதி நீக்க வகை செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
