”படுத்தால் தூக்கம் வரல… திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன்” – சசிகலா பிறந்தநாள் சபதம்!

Published On:

| By christopher

i will not allow dmk form govt again - sasikala

”விளம்பரத்தால் திமுக ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைக்கிறது. நான் ஆட்சிக்கு வர விட மாட்டேன்” என சசிகலா கூறியுள்ளார்.

தனது 71-வது பிறந்தநாளை சசிகலா இன்று (ஆகஸ்ட் 18) கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் குவிந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

ADVERTISEMENT

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடந்த 2020ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ‘தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று வாக்குறுதி அளித்தார்.

2021 தேர்தல் அறிக்கையில் தூய்மைப் பணியாளர் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிப்படி நீங்கள் நடந்து கொண்டீர்களா?. இதுகுறித்து முதல்வர் எனக்கு பதிலளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்த பணிகளை நாம் செய்ய முடியாதென்றால் பிறகு எதற்கு 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? குழுக்கள் வழியாகவே இந்த பணிகளை ஒப்படைத்திருக்கலாம். அதற்கு கொஞ்சம் வேலை பார்க்கவேண்டும். ஆனால் ஆட்சியில் இருக்கும் திமுக அரசுக்கு தான் எத்தனை துறைகள் உள்ளன, எத்தனை செயலர்கள் உள்ளனர். அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று எதுவுமே தெரியவில்லை. இது தெரியாமல் வந்து ஆட்சியில் அமர்ந்து மக்களை பிழிந்து எடுக்கின்றனர்.

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று செயல்படுகிறது. இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தூய்மைப் பணியாளர் விவகாரம் தான் சிறந்த எடுத்துக்காட்டு. எனவே வரும் தேர்தலில் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் தாரைப் பறிக்கும் நிலையில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்குள் 10 யானைகள் புகுந்து நாசமாக்கியதைப் போன்று இருக்கிறது தமிழ்நாடு.

எனக்கு படுத்தால் தூக்கம் வரவில்லை. ஏனென்றால் கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கிறோம். விளம்பரத்தால் திமுக ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைக்கிறது. நான் ஆட்சிக்கு வர விட மாட்டேன். நான் கடந்த 39 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை அறிந்தவளாக இருக்கிறேன். இன்று மக்களை பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என சசிகலா பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share