பாலிவுட் நடிகை வாணி கபூர் – பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘அபிர் குலால்’ பட ரிலீஸுக்கு மத்திய அரசு தடை விதித்தது. vaani kapoor Fawad Khan’s ‘Abir Gulaal’ banned after Pahalgam attack
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இரு நாட்டு எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கெனவே நாட்டில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர் – பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் அபிர் குலால் திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) வலியுறுத்தி வருகிறது.
தொடர்ந்து அப்படத்திற்கு எழுந்துவரும் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஏற்கெனவே அப்படத்தில் இருந்து வெளியான குதயா இஷ்க் மற்றும் ஆங்ரேஜி ரங்ராசியா ஆகிய இரண்டு பாடல்கள் யூடியூப் இந்தியா தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது பாடலாக ’டெய்ன் டெய்ன்’ வரும் 23ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக அது வெளியாகவில்லை.

இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ’அபிர் குலால்’ திரைப்படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.