சமூக நீதிக் குடும்பப் படங்களின் நாயகன் வி.சேகர்

Published On:

| By Pandeeswari Gurusamy

V. Sekhar the hero of social justice family films

தமிழ் சினிமாவில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், விசு இவர்கள் வரிசையில் பல குடும்பக் கதைகளை மக்கள் ரசிக்கும் படியாக எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் வி சேகர். அந்தக் குடும்பக் கதைகளில் எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சமூக நீதியை தைரியமாக மனசாட்சியுடன் நேர்மையுடன் சொன்னவர் என்பதுதான் சேகரின் தனிச்சிறப்பு .

பெரிய நடிகர்கள், அறிமுக நடிகர்கள் என்று யார் நடித்தாலும் அவர் படத்தில் கேரக்டர்கள்தான் ஹீரோ. பிரபலம் மிக்க நடிகர்கள் பிரபலமில்லாத நடிகர்கள் என்று யார் நடித்தாலும் கேரக்டரைப் பொறுத்துதான் காட்சிகள் இருக்கும். . துப்புரவுத் தொழிலாளி , பூச்சி மருந்து அடிப்பவர் , வெட்டியான் என்று எளிய கதாபாத்திரங்களுக்கு தன் படத்தில் முக்கியத்துவம் கொடுத்த படைப்பாண்மை சேகரின் தனிச்சிறப்பு..

ADVERTISEMENT

நடுத்தர வர்க்கத்து பிரச்சனைகளை , கூட்டுக் குடும்பங்களின் அழகை, சொத்து வாழ்வியல் உட்பட எல்லா விசயங்களிலும் பெண்களின் உரிமையை உயர்த்தி பேசும் அவரது படங்கள் .

முதல் படம் எப்படியாவது ஓடி விட வேண்டும் ; இரண்டாவது படத்திலேயே யாராவது பெரிய ஹீரோ படத்துக்கு இயக்குனர் ஆகி லட்சம் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என்று அன்றும் இன்றும் துடிக்கும் இயக்குனர்கள் மத்தியில், பிரபல நடிகர்களின் ஆணவம் அநியாயம், தனது ரசிகர்களை திட்டமிட்டுக் கெடுப்பது , அவர்களை ஏமாற்றி அவர்களது நம்பிக்கைகளை சிதைப்பது , வாழ்வை அழிப்பது, தன்னால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் விட்டு விட்டு ஓடுவது, ரசிகர் மன்றம் என்ற பெயரில் ஏழை ரசிகர்கள் தங்கள் கைக்காசைப் போட்டு நஷ்டப்படுவது, அப்படிப்பட்ட ரசிகர்கள் நேரில் வரும்போது கூட அவர்களை மதிக்காத ஹீரோக்கள்… என்று, இன்றைக்கும் மேலும் பொருந்தும் வகையில் தனது முதல் படமான நீங்களும் ஹீரோதான் (அதாவது உழைக்கும் மக்கள்தான் உண்மையான ஹீரோ) என்ற தனது முதல் படத்தின் மூலம் 1990 ஆண்டில் சொல்லி அன்றைய பெரிய ஹீரோக்களின் நேரடி மற்றும் மறைமுக கோபத்துக்கு ஆளானவர் வி சேகர். இன்னொரு பக்கம் சில பிரபல நடிகர்கள் இந்தப் படத்துக்கு அப்புறம் ரசிகர்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கவும் ஆரம்பித்தனர்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வா நத்தம் கிராமத்தில் .வெங்கடேசன் – பட்டம்மாள் தம்பதிக்கு 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்தவர் வி.சேகர். தமிழ்செல்வி, காந்திமதி என இரண்டு சகோதரிகள், அண்ணாதுரை என்கிற ஒரு சகோதரர் .
உள்ளூர் பள்ளியில் ஐந்தாவது வரை , வேட்டவலம் உயர்நிலை பள்ளியில் உயர்நிலை படிப்பில் . இறுதி தேர்வில் இரண்டாவது மாணவனாகவும் தேர்ச்சி பெற்றார். பியூசி படிப்பை திருவண்ணாமலையில் முடித்த நிலையில், தனது உறவினர் செ.கண்ணப்பன் உதவியால் ஏவிஎம்.ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம். லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்கு சேர்ந்தவர்.

பிறகு கண்ணப்பன் உதவியால் மாநகராட்சி சுகாதாரத் துறையின் மலேரியா ஒழிப்பு பணியாளராக வேலைக்கு சேர்ந்தவர். தொடர்ந்து 15 ஆண்டுகள் அந்த பணியை செய்தபடியே, மாலை நேரத்தில் நந்தனம் கலை கல்லூரியில் பி.ஏ., அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. என்று படிப்பு முடித்தார்.

ADVERTISEMENT

உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். தான் உணர்ந்த கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க சினிமா மீடியத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பகுதி நேரமாக எடிட்டர் லெனினிடம் உதவியாளராக சேர்ந்தார். அப்போது தயாரிப்பு நிர்வாகி நாராயணனின் நட்பு கிடைக்க அவர் மூலமாக கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய ‘கண்ண தொறக்கனும் சாமி” படத்தில் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர், பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றினார்.

முதல் படம் ‘நீங்களும் ஹீரோதான்’. வெற்றி பெறாத நிலையில் மறுபடியும் மலேரியா ஒழிப்புப் பணியாளர் பணியை தொடர்ந்தார்.

போர்வாள் என்ற பெயரில் அவர் இயக்குவதாக ஒரு படம் தினத்தந்தியில் விளம்பரம் எல்லாம் வந்து நின்றுபோனது.

அடுத்து ரூட்டை மாற்றுவோம் என்று நான் புடிச்ச மாப்பிள்ளை’ படத்தை இயக்கினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படத்தில் வந்த மாமனார் கேரக்டருக்குப் பிறகு தமிழ் சினிமா கண்ட சிறப்பான மாமனார் கேரக்டர், அந்தப் படத்தில் ஜனகராஜ் நடித்த மாமனார் கேரக்டர்தான் . அந்தக் கேரக்டர் அன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் புதுசு. ஜனகராஜுக்கும் புதுசு .

எனவே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது. தெலுங்கு மொழியில் ‘மாமா காரு’ என்கிற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வசூலில் சாதனை படைத்தது. அது வரை இயக்குனராக இருந்த தாசரி நாராயண ராவ், அந்தப் படத்தின் மூலம் நடிகராகி புகழ் பெற்றார். மேலும், இந்தி, ஒரிசா போன்ற மொழிகளிலும் ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ படம் ரீமேக் ஆனது.

அதன் பிறகு ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ படத்தில் மனோரமாவுக்கு ஜோடியாக கவுண்டமணியை நடிக்க வைத்தார். கவுண்டமணிக்கு மிகப்பெரிய இமேஜ் கொடுத்த அந்தப் படமும் ஹிட் .

அடுத்து ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நான் பெத்த மகனே’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’, ‘விரலுக்கு ஏத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘வீட்டோட மாப்பிள்ளை’, ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘ஆளுக்கொரு ஆசை’ போன்ற தமிழ்ப் படங்களை இயக்கினார். எல்லாப் படங்களும் குறைந்த செலவில் நல்ல கண்ணியமான கருத்தாழம் மிக்க கதைகள் , சமூக அக்கறைப் பார்வை தரமான காமெடி இவற்றின் கலவையாக இருந்தது.

வரவு எட்டணா செலவு பத்தணா படத்தை கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், மீனா நடிப்பில் ‘ஹெந்தீர் தர்பார்’ (மனைவியின் நீதி மன்றம்) என்ற பெயரில் இயக்கினார். அங்கும் படம் சூப்பர் ஹிட்.

தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்த வி.சேகர், சரத்குமார் நடிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘ஏய்’ படத்தையும் தயாரித்தார். பிரபு நடித்த ‘பொண்ணு பாக்கப் போறேன்’ படத்திற்கு திரைக்கதை எழுதியவர், சின்னத்திரையில் ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வீட்டுக்கு வீடு’ தொடர்களை எடுத்திருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கிய ‘பள்ளிக்கூடம்’ படத்தில் கல்வி அதிகாரியாக நடித்தார்.

தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கம் , இயக்குனர்கள் சங்கம் , இவற்றில் பல நல்ல விசயங்களை செய்ததோடு , தயாரிப்பாளர் பெப்ஸி தொழிலாளர்கள் பிரச்சனை வரும்போது எது நியாயமோ அந்தத் தரப்பில்தான் என்றும் நிற்பார்

தமிழக அரசியல் குறித்த ஆழமான அறிவும் , தமிழ் வரலாறு இலக்கியம் ஆன்மிகம் குறித்த பல அரிய தகவல் களஞ்சியமாகவும் இருந்தார்

தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த மாமா செ.கண்ணப்பனின் மகள் தமிழ்செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மலர்க்கொடி என்கிற மகளும், கார்ல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர்.

ஒரு சில படங்களில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் , மகனை நாயகனாக வைத்து அவர் எடுத்த சரவணப் பொய்கை படம் ரிலீஸ் ஆகாமல் போனது, அவர் மீது வந்த சிலை கடத்தல் வழக்கு ஆகியவற்றில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது .

சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த போது கூட , ”விஜய் டி வி க்கு ஒரு மெகா சீரியல் இயக்கப் போகிறேன்” என்று உற்சாகமாக சொன்னார் .

உடல் நலம் நொடித்துப் போய் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வி சேகர் பத்து நாளைக்கு மேல் தீவிர சிகிச்சை பெற்றும், பலனின்றிக் காலமானார்.

அவரது உடலை ராமச்சந்திராவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வி.சேகரின் கோடம்பாக்கம், டாக்டர் சுப்பராயன் நகர் மெயின் ரோட்டில் உள்ள ‘திருவள்ளுவர் இல்லத்திற்கு’ கொண்டு செல்ல, அங்கு திரையுலையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இறுதி அஞ்சலிக்கு பிறகு அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை வேட்டவலம் அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

அங்கு அவருக்கு இறுதி அஞ்சலியும், அதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்கும் நடைபெற உள்ளது.

வி.சேகரின் படங்கள் சமூக நீதித் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் .

அவர் இயக்க இருந்த போர்வாள் என்ற படம் நின்று போயிருக்கலாம் . அதனால் என்ன? அவரே தமிழ் சினிமாவின் போர்வாள்தான்.

-ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share