ADVERTISEMENT

“மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கம்”… கேரளாவில் உதயநிதி பேச்சு!

Published On:

| By Selvam

இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று ‘மலையாள மனோரமா’ ஊடகக் குழுமத்தின், கலை மற்றும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட இயக்க அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியலின் தாக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ADVERTISEMENT

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தந்தை பெரியார் இதே கேரளாவில் 1924-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார். அதேபோல கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர் தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென்னிந்திய நல உரிமை சங்கத்தை ஆரம்பித்தார். அது தமிழ்நாட்டில் புதிய அரசியல் எழுச்சியை ஆரம்பித்தது.

ADVERTISEMENT

தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்தியாவிலேயே மிகவும் முற்போக்கு மாநிலங்களாகும். இரண்டு மாநிலங்களிலும் பாசிஸ்ட்டுகள் மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவை.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பு இலக்கியங்கள் என்று சொல்லப்பட்டவை எல்லாம் பக்தி இலக்கியங்களும், புராணங்களும் தான். அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் தான் தமிழ் இலக்கியத்தில் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார்கள். திராவிட இயக்கங்கள் இலக்கியங்களை சமூக மாற்றத்திற்காக பயன்படுத்தினார்கள்.

ADVERTISEMENT

பெரியாரின் எழுத்துக்கள் சாதியம், பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக இருந்தது. அண்ணா, கலைஞர் ஆகிய இருவரும் இலக்கியத்தின் மூலம் தொண்டர்களிடம் எளிமையாக உரையாடினார்கள். அதனால் தான் இன்றைக்கு தனித்துவம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இந்தியாவில் மாநில மொழிகள் இன்றைக்கு உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் நாங்கள் சார்ந்திருக்கிற திராவிட இயக்கம் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். திராவிட இயக்கம் இந்தி திணிப்பை எதிர்த்ததே தவிர,  தனிப்பட்ட முறையில் இந்தி மொழி மீது எங்களுக்கு எந்தவித வெறுப்பும் கிடையாது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பட்டாசு… பயந்து ஓடிய ‘பரியேறும் பெருமாள்’ கருப்பி… படத்தை போலவே சம்பவம்!

ப்ளடி பெக்கர்: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share