பொதுவாக, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்கும் போது, தெருநாய்கள், செல்லப்பிராணிகள் மிகவும் பயந்து போய் காணப்படும். பட்டாசு வெடித்தால் மிரண்டு ஓடும் சூழலுக்கு தள்ளப்படும். பாதுகாப்பான இடங்களை தேடி தெருநாய்கள் ஆங்காங்கே ஓடுவதை இந்த காலக்கட்டத்தில் காண முடியும். தீபாவளி பட்டாசு வெடிப்புக்கு பிரபல நாய் ஒன்றும் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரியேறும் பெருமாள் படம் சாதிய அடக்குமுறைக்கு எதிராக எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் நடிகர் கதிர், கருப்பி என்ற சிப்பிப்பாறை நாயை வளர்த்து வேட்டைக்கு பயன்படுத்தி வருவார். அப்போது ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் அந்த நாயை பிடித்து ரயில் தண்டவாளத்தில் கட்டிப் போட்டு விடுவார்கள். இதில், ரயில் மோதி ‛கருப்பி’ நாய் இறந்துவிடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கருப்பி நாய்க்கு தனி ஒப்பாரி பாடலும் அந்த படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த படத்தில் நடித்த விஜயமுத்து என்பவர் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளத்தில் கருப்பி நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில், தீபாவளி தினத்தில் வெடி சத்தத்தை கேட்டு பயந்த கருப்பி நாய் சாலையில் ஓடியுள்ளது. அப்போது சாலையில் வந்த வாகனத்தில் மோதி நாய் உயிரிழந்துள்ளது. இதனை கண்டு நாயின் உரிமையாளர் விஜயமுத்து கடும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தார்.
தொடர்ந்து, விஜயமுத்து கருப்பி நாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
17 ஐபிஎல் சீசன்களில் தோனி, ரோகித் சம்பாதித்தது எத்தனை கோடி?
தென் மாவட்ட மக்களே உஷார்… வானிலை மையம் கொடுத்த வார்னிங்!