உதயசங்கரன் பாடகலிங்கம்
புதுமாதிரியான திரையனுபவம்!
இயக்குனர் நெல்சன் ஒரு படம் தயாரிக்கிறார். அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் அதனை இயக்குகிறார். ‘டாக்டர்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கவின், அதில் நாயகனாக நடிக்கிறார். அந்த படத்தின் பெயர் ‘ப்ளடி பெக்கர்’ என்பதும், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலானது.
‘டார்க் ஹ்யூமர்’ வகைமையில் புதுமாதிரியான திரையனுபவத்தைத் தரப்போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
தீபாவளி வெளியீடாக அமரன், பிரதர் உடன் களமிறங்கியிருக்கும் ‘ப்ளடி பெக்கர்’ என்ன மாதிரியான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்துகிறது?
இரு வேறு உலகங்கள்!
செல்வச் செழிப்பான ஒரு பங்களாவில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் சேர்ந்து ஒரு சிறுவனைத் துன்புறுத்துகின்றனர். பிச்சையெடுக்கும் தொழிலைச் செய்துவரும் ஒரு சிறுவனும் சிறுமியும் தொலைவில் இருந்து ஒரு பங்களாவைப் பார்த்து ஏக்கமுறுகின்றனர்.
இவ்விரு காட்சிகளுக்குப் பிறகு, பள்ளியில் இருந்து வீடு திரும்பும் சிறுவன் பகுதி நேரமாகப் புத்தகம் விற்கும் பணியில் ஈடுபடுவதும், அவனுக்குப் போட்டியாக ஒரு நபர் ‘நான் ஊனமுற்றவன்’ என்று கூறிப் பிச்சையெடுப்பதும் திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படுகிறது.
மாற்றுத்திறனாளியாக அந்த நபர் (கவின்) நடித்து பிறரை ஏமாற்றுகிறார். தன்னைக் குறை கூறுவோரைத் தரம் தாழ்ந்து விமர்சித்து அவமானப்படுத்துகிறார். ‘நான் செய்வதே சரி’ என்று நினைத்து வாழ்கிறார். அந்தச் சிறுவனைக் குப்பைத்தொட்டியில் இருந்து வளர்த்து வருவதாக, அடிக்கடி சொல்லிக் காட்டுவது அவரது வழக்கம். அது அச்சிறுவனை எரிச்சலடைய வைக்கிறது.
அந்த சிறுவன் அவரோடு சண்டையிட்டாலும், ஒருபோதும் அவர் மீது வெறுப்பை உமிழவில்லை. ஒருநாள், அந்த சிறுவன் கண்ணெதிரே ஒரு வாகனத்தில் ஏறிச் செல்கிறார் அந்த பிச்சைக்காரர். பெரிய பங்களாவுக்கு எதிரே கூடியிருக்கும் 24 பிச்சைக்காரர்களோடு இருபத்தைந்தாவது ஆளாக இணைகிறார். அந்த பங்களா, ஏற்கனவே நாம் பார்த்த காட்சியில் இடம்பெற்றது தான்.
விருந்து சாப்பாட்டை உண்ட களைப்பில் பிச்சைக்காரர்களில் சிலர் உறங்க, முன்னர் பார்த்த அந்த நபர் மட்டும் அனைவரது கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு அந்த பங்களாவுக்குள் நுழைகிறார். அங்கு யாரும் இல்லை என்பது அவரது எண்ணம். அதனால், கையிலிருக்கும் செல்போனை கொண்டு அச்சிறுவனுக்கு போன் செய்கிறார். ‘நான் வர 2 நாள் ஆகும்’ என்கிறார். எதிர்முனையில் இருக்கும் அந்த சிறுவன் பதைபதைக்கிறான். ஆனால், அந்த பிச்சைக்காரரோ அதனை ரசித்தவராக போனை ‘கட்’ செய்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில், அவர் நினைத்தது எல்லாம் தலைகீழாகிறது. அந்த பங்களாவில் ஒரு ஆணும் பெண்ணும் இருக்கின்றனர். அந்த பெண் ஒரு கொலையாளி. அவர் கொலை செய்த ஆணின் ஆவி, அந்த பிச்சைக்காரருக்கு மட்டும் புலனாகிறது.
அடுத்த சில மணி நேரங்களில், அந்த பங்களா உள்ளிட்ட சொத்துகளைப் பிரித்துக் கொள்வதற்காக உரிமையாளரின் வாரிசுகள் ஒன்றுகூடுகின்றனர். அவர்கள் முன்னால் அந்த பிச்சைக்காரர் இன்னொரு வாரிசாக நிறுத்தப்படுகிறார்.
அந்த உரிமையாளரின் வாரிசுகள் தான், திரைக்கதையின் தொடக்கத்தில் நாம் பார்த்த குழந்தைகள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி, இன்று அவர்களுக்கு மகன்களும் மகள்களும் இருக்கின்றனர்.
முறைதவறிப் பிறந்த இன்னொரு வாரிசுதான் கொலைக்கு உள்ளாகி, பேயாக அந்த பங்களாவில் திரிகிறார். அவருக்குப் பதிலாகத்தான் அந்த பிச்சைக்காரர் அவர்கள் முன்னால் நிற்கிறார். ’உங்களது தந்தைக்குப் பிறந்த இன்னொரு வாரிசு இவர்தான்’ என்று வழக்கறிஞர் சொல்கிறார். அதனை அக்குடும்பத்தினர் ஏற்பதாக இல்லை.
அது மட்டுமல்லாமல், அந்த உரிமையாளர் எழுதிய உயிலில் பிற வாரிசுகளுக்கு லட்சங்களைக் கொடுத்துவிட்டு, அந்த ஒரு வாரிசுக்கு மட்டும் 299 கோடி ரூபாய் சொத்துகளை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அதனைக் கேள்விப்பட்டதும், ‘அவன் உயிரோடு இருந்தா தானே’ என்று அனைவரும் கைகளைப் பிசைகின்றனர். கொலை வெறியோடு அவர்கள் அந்த பிச்சைக்காரரைத் துரத்த ஆரம்பிக்கின்றனர். அதன்பின் என்னவானது? உயிரோடு அங்கிருந்து அந்த பிச்சைக்காரர் வெளியேறினாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
பிச்சைக்காரன், பணக்காரன் என்று இரு வேறு உலகங்களில் வாழும் மனிதர்களைக் காட்டுகிறது ‘ப்ளடி பெக்கர்’. அது மட்டும் போதாது என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்துவமானதாக வடிவமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவபாலன். ஆனால், அதுவே ‘ஓவர்டோஸ்’ ஆகி திரைக்கதையின் நகர்வைப் பாதித்திருக்கிறது.
அனுபவம் புதுமை!
இந்தப் படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, தெலுங்கு நடிகர் பிருத்விராஜ், சுனில் சுகாதா, டி.எம்.கார்த்திக், பிரியதர்ஷினி ராஜ்குமார், அர்ஷத் மற்றும் புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். நாயகன் கவினைப் பொறுத்தவரை, இது ‘பயங்கரமானதொரு பரீட்சார்த்த முயற்சி’. ரொமான்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் என்று இளமைத்துள்ளலை வெளிப்படுத்தும் கதைகளில் நடிப்பதை விட்டுவிட்டு, இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்குவது அபாயம் நிறைந்தது.
ஆனால், அதனை ஏற்பதில் தெரிகிறது அவரது துணிச்சல். ’அது மட்டும் போதாது’ என்று இப்படத்தில் நடிப்பிலும் அடுத்தகட்டத்திற்கு நகர முயற்சித்திருக்கிறார்.
இப்படத்தில் நாயகி என்று எவரையும் கைகாட்ட முடியவில்லை. மெரின் பிலிப் இதில் கவின் மனைவியாக வருகிறார். திரையில் அவர் தோன்றும் நிமிடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், ‘அங்காடித் தெரு’ அஞ்சலி போன்று இப்படத்தில் மிகச்சில ஷாட்கள் மட்டும் அவர் வந்து போயிருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லிக்கு இது ஒரு ‘மைல்கல்’ படம். சிரிக்க வைப்பதோடு அழ வைக்கும் முயற்சியிலும் ஈடுபட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவ்வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ‘போர்தொழில்’ வில்லன் சுனில் சுகாதா, இதிலும் அப்படியொரு பாத்திரத்திலேயே தோன்றியிருக்கிறார். ஆனால், இதில் அவரது பாத்திரம் திரையில் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது.
இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் தோன்றி நம்மை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறார் ராதாரவி. அவரே இப்படத்தில் அந்த பங்களா உரிமையாளராகவும் வருகிறார். அவரது வாரிசுகளாக வருபவர்கள், பேரன்கள், பேத்திகளாக வருபவர்களின் நடிப்பு காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு உள்ளது. அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபந்துலா என்று அவர்களில் பலர் புதுமுகங்கள் என்பதால், அவர்கள் ஏற்ற பாத்திரங்களோடு நம் மனம் ஒன்றுவதில்லை. அது ஒரு குறையே.
மலையாள நடிகை சலீமா இதில் நம்மை மிரட்டி எடுத்திருக்கிறார். அவரது வாரிசுகளாக நடித்தவர்களும் அவ்வாறே நடித்திருக்கின்றனர். ராதாரவியின் நடிப்பு வாரிசாக வரும் அர்ஷத் தொடக்கத்தில் சிரிக்க வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் ‘யார்றா இவன்’ என்று அலறும் அளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், படத்தின் பெரும்பாலான காட்சிகளை அந்த பங்களாவினுள் படம்பிடித்திருக்கிறார். ‘ஒரே இடத்தில் கேமிரா சுற்றி வருகிறதே’ என்ற எண்ணம் ஏற்படாத அளவுக்கு, காட்சிகளின் தன்மையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் நிர்மல், ஒரு புதிர் போட்டியில் பங்கேற்பவர்களாகப் பார்வையாளர்களை ‘ட்ரீட்’ செய்திருக்கிறார். திரைக்கதையும் அதற்கேற்றாற் போல அமைந்திருப்பதால், தடையின்றி தன் பணியைச் செய்திருக்கிறார். அதே நேரத்தில், கதை சொல்லலில் எந்தக் குறையும் இல்லை.
கலை இயக்குனர் மணிமொழியன் ராமதுரை, இயக்குனரின் எண்ணத்திற்கேற்பத் திரையில் காட்சியாக்கம் நிகழ வழிவகை செய்திருக்கிறார். ஆனால், ’அவரது கலை வடிவமைப்பில் செயற்கைப்பூச்சு அதிகமிருக்கிறதோ’ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடிவதில்லை.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஆனால், அந்தக் குறையைப் பின்னணி இசையில் ஈடு செய்துவிடுகிறார். பின்பாதியில், ‘நாயகன் கவினோடு சேர்ந்து நாமும் ஓடுகிறோமோ’ என்று எண்ண வைக்கிறார்.
இன்னும் ஒலி வடிவமைப்பு, சண்டைக்காட்சி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ், டிஐ, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இயக்குனர் உருவாக்க விரும்பிய உலகைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் சிவபாலனுக்கு முதல் படம் இது.
’அறிமுகமே அமர்க்களம்’ என்று சொல்லும் வகையில் வித்தியாசமானதொரு களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதில் அவர் ஆடியிருக்கும் ஆட்டமும் தமிழ் திரையுலகம் கண்டிராதது. ஹாரர், காமெடி, த்ரில்லர், ஆக்ஷன், பேமிலி, மிஸ்டரி என்று பல வகைமைகளின் கலவையாக இப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். அவ்வாறு அமைந்த காட்சிகளை, குறிப்பிட்ட ‘திரைக்கதை ட்ரீட்மெண்டுக்குள்’ அடக்கிய வகையில் அவரது கற்பனை ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ரெடின் கிங்ஸ்லி பாத்திரம் ஒரு பேய் என்று தெரிய வருவதில் தொடங்கி, இத்திரைக்கதையில் பல திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை அடிக்கோடிட்டுக் காட்டாமல் அப்படியே விட்டிருக்கிறார் இயக்குனர்.
‘சென்சார் போர்டு’ அனுமதிக்காது என்று சில காட்சிகளைக் காட்டாமல் தவிர்த்திருக்கிறது படக்குழு. அது போன்ற குறைகளைச் சரிப்படுத்தியிருக்கலாம்.
முக்கியமாக, இக்கதையில் வரும் கவின் பிளாஷ்பேக் காட்சிதான் படத்தின் உயிர்நாடி. அதனை இன்னும் ‘பெட்டராக’ இடம்பெறச் செய்திருக்கலாம். அது போன்ற சில குறைகளைச் சுட்டிக்காட்ட முடியும். லாஜிக் மீறல்களும் கூட இதில் ஏராளம் தான்.
ரெடின் பாத்திரம் ஏன் நாயகனான கவின் கண்களுக்குத் தெரிகிறது என்பதற்கான விளக்கம் திரைக்கதையில் இல்லை. அதனைச் சொல்லியே ஆக வேண்டும் என்று கூற முடியாது. ஆனால், அதனைச் செய்திருந்தால் திரைக்கதையின் வலு கூடியிருக்கும்.
போலவே, குழந்தைகளுக்குள் இருக்கும் வன்முறை உலகைக் காட்டுவதாக இக்கதை அமைந்திருப்பது சில பல கேள்விகளை எழுப்பக் கூடியது. குறைகளைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால், ‘ப்ளடி பெக்கர்’ நிச்சயம் ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தருகிற படம்.
சந்தானம் நடிப்பில், ரத்னகுமார் இயக்கிய ‘குலு குலு’ எப்படி வித்தியாசமானதொரு திரையனுபவத்தைத் தந்ததோ, அப்படியொரு படம் இது. அதனால், இதனை ‘ட்ரெண்ட்செட்டர்’ என்றோ, ‘ப்ளாக்பஸ்டர்’ என்றோ கொண்டாட இயலாது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அப்படியொரு சம்பவம் நிகழக்கூடும்.
இப்படத்தில் சிரிப்பதற்கும் ரசிப்பதற்கும் நிறையவே காட்சிகள் உண்டு. இந்த காட்சிகளோ, கதாபாத்திரங்களோ தேவையற்றவை என்று சொல்லிவிட முடியாதவாறு, செறிவான உள்ளடக்கத்துடன் அமைந்திருக்கிறது ‘ப்ளடி பெக்கர்’. அதற்காகவே இயக்குனர் சிவபாலனைப் பாராட்டலாம்.
இதே வேகத்தோடு, அடுத்த படத்தையாவது வன்முறை எண்ணங்களை விதைக்காத நல்லதொரு கதையோடு அவர் தர வேண்டுமென்பதே நம் விருப்பம்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விமர்சகரை மிரட்டிய மலையாள நடிகர் !
17 ஐபிஎல் சீசன்களில் தோனி, ரோகித் சம்பாதித்தது எத்தனை கோடி?