பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார், பைக், மோதிரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இன்று (ஜனவரி 17) வலியுறுத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
டிடிவி தினகரன்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு இந்த ஆண்டிலாவது பரிசீலனை செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்ப்போருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் 373 வது தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையிலும் அரசுப் பணி வழங்குவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணே…அதாண்ணே இது: அப்டேட் குமாரு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடுக: உயர்நிலைக்குழுவுக்கு திமுக கடிதம்!