நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இவ்வாறு சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன ராணுவம் இந்திய எல்லையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது என்று 2022ஆம் ஆண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதை முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளிக்க ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனால் அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.சி.மாசி அமர்வில் இன்று (ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர், “எதிர்க்கட்சித் தலைவராக அவர் குரல் கொடுத்தார். பத்திரிகைகளில் வெளியாகும் இதுபோன்ற விஷயங்களை அவர் பேசாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவராகவே இருக்க முடியாது” என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ… அதை ஏன் நாடாளுமன்றத்தில் சொல்லக்கூடாது. சமூக ஊடக பதிவுகளில் ஏன் சொல்ல வேண்டும்” என்று கேள்வி எழுப்பினர்.
ராகுல் காந்தியின் கருத்தை ஏற்கமறுத்த நீதிபதிகள், ‘2000கீமி இந்திய பரப்பளவு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களிடம் நம்பகமான தகவல்கள் ஏதேனும் உள்ளதா? நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா? எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் இதுபோன்று பேசுகிறீர்கள்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்திருந்தால் இப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டீர்கள்?” என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.
இறுதியில் ராகுல் காந்தி மீதான அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ள அவதூறு வழக்கு விசாரணையை விசாரிக்க மூன்று வாரத்திற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.