தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். tn cabinet ministry approval for tn space policy
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப்ரல் 17) மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பின்னர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு இன்று தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது. இதை இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதன்படி விண்வெளி தொழில்நுட்பத்தில் தமிழகம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில் முக்கிய இலக்காக அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளி துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10 ஆயிரம் நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்; விண்வெளி துறைக்கு தகுதியான, திறமை வாய்ந்த நபர்களை உருவாக்குதல்; இந்த மூன்று இலக்குகளுடன் விண்வெளி தொழில்நுட்ப சேவையில் நம்முடைய கவனம் இருக்க வேண்டுமென்று அமைச்சரவையில் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.
விண்வெளி தொழில்நுட்பப் பந்தயத்தில் இந்தியாவில், ஏன் உலக அளவில் இருக்கும் போட்டியில் இன்று தமிழகத்தின் பாய்ச்சலுக்கு மிகப்பெரிய ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறார் முதல்வர்.
இதில் 25 கோடி ரூபாயில் இருக்கின்ற சிறிய கம்பெனிக்கும் (Startups) மிகப் பெரிய ஊக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் மிகவும் முக்கியமான ஒரு அம்சம்.
விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் அதிவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. உலக அளவில் எலான் மஸ்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் எங்கேயோ இருக்கின்றது என்று நினைக்கின்ற நேரத்தில், அதற்குப் போட்டியாக நமது தமிழ்நாட்டில் இங்கே சென்னையில் ஒரு நிறுவனம் மிகச் சிறப்பான பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ராக்கெட்டை பிரிண்ட் செய்கிறோம். அவர்களை எல்லாம் ஊக்குவிக்கும் வகையில், இந்த பாலிசி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் patents வாங்குவதற்கு 50 சதவீதம் சலுகை நம்முடைய அரசாங்கமே வழங்கும். 300 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளுக்கு ஸ்பெஷல் பேக் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்.
அதேபோல, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், ’ஸ்பேஸ் பே’ அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் முதலீடுகள் வருமேயானால், அதற்கு ஸ்பெஷல் பேக்கேஜ் கொடுப்பதற்கான வழிவகைகள் இந்த பாலிசியில் இருக்கிறது.
ஊதிய மானியமாக முதலாம் ஆண்டு 30 சதவீதம், இரண்டாம் ஆண்டு 20 சதவீதம், அதற்கடுத்து, மூன்றாம் ஆண்டு 10 சதவீதம் என்ற ஊதிய அளவில் கூட ஊக்கத்தை இந்த பாலிசி தருகிறது.
இத்தகையை நுணுக்கமான திட்டங்களுடன் தமிழ்நாடு ஸ்பேஸ் பாலிசி வெளியிடப்பட்ட இந்த நாள் பொன் நாள். விண்வெளி தொழில்நுட்ப கம்பெனியை உருவாக்கக்கூடிய இளம் தலைமுறையினருக்கு இது மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும். உலகளவில் இருக்கும் பல தொழில் முனைவோர்களும் இனி நிச்சயமாக தமிழகத்தை நோக்கி வருவார்கள்” என டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.