ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா: அரசு மரியாதை – தஞ்சையில் கோலாகலம்!

Published On:

| By Kavi

சோழப் பேரரசின் கலை, கலாச்சாரம், ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவ வலிமைக்கு பொற்கால அத்தியாயம் தீட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா, இன்று (நவம்பர் 1)தஞ்சாவூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின் முக்கிய நிகழ்வுகள் இன்று தஞ்சை பெரியகோவிலில் பக்திப் பரவசத்துடன் நடந்தன.

ADVERTISEMENT

இன்று காலை 6:30 மணியளவில் மங்கள இசையுடன் இரண்டாம் நாள் விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து, காலை 7:20 மணியளவில் தஞ்சாவூர் பெரியகோவில் அருகே அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்.பி ச.முரசொலி, மாவட்ட ஆட்சியர் மா.பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழா குழு தலைவர் து.செல்வம், அறநிலையத்துறை உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் சோழர்கள் அளித்த முக்கியத்துவத்தை உலகறியச் செய்யும் விதமாக, திருமுறை திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. யானை மீது திருமுறை ஏற்றி, தஞ்சையின் ராஜ வீதிகளில் ஓதுவார்களும் பக்தர்களும் உலா வந்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, தஞ்சாவூர் பெரியகோவிலில் வீற்றிருக்கும் பெருவுடையார் (சிவன்) மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்புப் பேரபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, திராட்சை சாறு, ஆரஞ்சு சாறு, தேன், மாதுளை, விளாம்பழம், வில்வ இலை, வன்னி இலை உள்ளிட்ட 48 வகையான மங்களப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் விண்ணை எட்ட, பேரபிஷேகத்தைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT

கலைநிகழ்ச்சிகளும் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

நேற்று அக்டோபர் 31ஆம் தேதி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து தொடங்கிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு இன்றும் தொடர்ந்தது.

கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மிக் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டி மேள நாதசுரம், தவில், கரகாட்டம்,மயிலாட்டம் போன்ற பல்வேறு கலைகளில் 250க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிவன், பார்வதி, காளி, பச்சைக்காளி, பவளக்காளி, அரக்கன், கருப்பு போன்ற தேவலோக நடனங்களும், வள்ளித் திருமண வேடத்திலும் கலைஞர்கள் வலம் வந்தனர். குதிரை பூட்டப்பட்ட தங்க ரதம், ராஜராஜ சோழன், வாயில்காவலர்கள் வேடமிட்ட கலைஞர்கள் பங்கேற்ற ஊர்வலமும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது.

மாமன்னரை போற்றும் விதமாக, சுமார் 400 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த வரலாற்று சிறப்புமிக்க 1040வது சதய விழாவை முன்னிட்டு, இன்று நவம்பர் 1ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டிருந்தார். தஞ்சாவூர் பெரியகோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share