அண்மையில் திருப்பதி கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குக் கொழுப்பு நெய்வழியாக கலக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. திருப்பதி தேவஸ்தானத்தில் இதற்காக பரிகார பூஜைகள் செய்து வருவதாகவும் ஆந்திராவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருமாள் பிரசாதமான லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது சனாதனத்துக்கு எதிரானது என்று ஆந்திராவில் தெலுங்கு தேசமும் பாஜகவும் வரிந்துகட்டிக் கொண்டு அரசியல் செய்து வருகின்றன. மேலும், லட்டு சைவம் அல்ல என்றும், இதனால் லட்டுவை சாப்பிட முடியாது என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில், 1934 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் குறித்து அமரர் கல்கி அன்றைய ஆனந்த விகடனில் எழுதிய ஒரு கட்டுரை இப்போது கவனம் பெறுகிறது. அதாவது 3-6-1934 ஆம் ஆண்டில் சரியாக 90 ஆண்டுகளுக்கு முன் விகடனில் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார் அமரர் கல்கி.
இக்கட்டுரை வானதி பதிப்பகம் வெளியிட்ட, ‘மகாத்மாவுக்கு விண்ணப்பம்’ என்ற கட்டுரைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகத்தின் 44 ஆவது பக்கத்தில் 9 ஆவது கட்டுரையாக, ‘வேண்டாம் வெட்கக் கேடு’ என்ற தலைப்பில் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.
அந்த கட்டுரையில் இருந்து சில பகுதிகளை உங்களின் மீள் வாசிப்புக்கு வழங்குகிறோம்.
இனி கல்கியின் எழுத்துகள் இதோ…
‘ஹிந்து மகாஜனங்களே! எங்கேயாவது பக்கத்தில் கோணிப்பை ஒன்று கிடந்தால் அதற்குள் தலையை விட்டுக் கொள்ளுங்கள். அல்லது ஏற்றச்சால் ஒன்று கிடைத்தால் அதையாவது தலையில் கவிழ்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கிடைக்காவிட்டால் துணியைப் போட்டாவது முகத்தை மூடிக் கொள்ளுங்கள். சமீபத்தில் ஸநாதன தர்மத்தின் பெயரால் கும்பகோணத்தில் நடந்த “புநித”மான காரியத்தை அறிந்த பிறகு, ஹிந்துவென்று சொல்லி கொள்ளும் யார்தான் வெட்கத்தினால் தலை கவிழாமல் இருக்க முடியும்?
அந்தப் “புநிதமான” காரியம் தினசரிப் பத்திரிகைகளில், முக்கியமாக ஆங்கிலோ-இந்தியப் பத்திரிகைகளில், விஸ்தாரமாக வருணிக்கப் பட்டிருப்பதைப் படித்திருப்பீர்கள்.
இருபத்து மூன்று ஆடுகள் கொலை!
பிராமணர்கள் மாமிசப் பிரசாதம் உண்டனர்
மதத்தின் பெயரால் ஜீவஹிம்சை
இவைபோன்ற தலைப்புகளுடனே அவ்விவரங்கள் வெளியாகியிருந்தன. தினசரிப் பத்திரிகை படிக்காத நேயர்களை உத்தேசித்து நடந்தது என்னவென்பதை இங்கே சுருக்கமாகச் சொல்லுகிறேன்:-
சென்ற மே 22-ஆம் தேதி கும்பகோண மகா க்ஷேத்திரத்தில் ஸ்ரீமத் சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் திவ்ய மடத்தில் பிராம்மணோத்தமர்கள் பலர் கூடி “வாஜபேயம்” என்னும் யாகத்தை நிர்விக்னமாய் வேதப் பிரமாணம் வழுவாமல் நிறைவேற்றி வைத்தார்கள்.
அது சமயம் யாகசாலையில் வேள்வித் தீ கொழுந்து விட்டெரிந்தது. வேதகோஷம் வானத்தைப் பிளந்தது. அதே சமயத்தில் யாகத்துக்காக வதைக்கப்பட்ட ஆடுகளின் அபயக்குரலும் எழுந்தது.
தீக்ஷிதர்கள் பதினேழு பேர் கொல்லப்பட்ட ஆடுகளின் உடலைக்கீறி வபை என்னும் உறுப்பை எடுத்தார்கள். பதினேழு ஆடுகள் பிரம்ம தேவருக்கும், ஆறு ஆடுகள் இதர தேவதைகளுக்கும் அவிர்ப்பாகமாக அளிக்கப் பட்டது. பிறகு யாகத்தை நடத்திவைத்த தீக்ஷிதர்களும் பக்த கோடிகளும் யாக சேஷமான மாமிஸப் பிரஸாதத்தைப் பக்தியோடு உட்கொண்டு உஜ்ஜீவிதர்கள் ஆனார்கள்.
விஷயம் இவ்வளவுதான். ஆனால் இது சம்பந்தமான ஒரு முக்கிய ‘பாயின்’டை நீங்கள் மறந்து விடக்கூடாது. அதாவது கொல்லப்பட்டவை இருபத்து மூன்று ஆடுகள் ஆனாலும் தீக்ஷிதர்கள் தலைக்கு ஒரு கழக்கோடிப் பிரமாண மாமிஸந்தான் நெய்யில் போட்டு விழுங்கினார்களென்று நேரில் பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள். (கழக்கோடி என்றால் சிறு அளவைகளில் ஒன்று)
கர்மமே! பிராமணர்கள் மாம்ஸம் சாப்பிட விரும்புகிறார்களா, இல்லையா என்பதா இப்போது கேள்வி? “ஸர்வம் பிரம்ம மயம் ஜகத்” என்னும் மகத்தான ஸத்தியத்தைப் போதிக்கும் நமது ஸநாதன தர்மத்தின் பெயரால் இத்தகைய ஜீவஹிம்ஸை செய்யலாமா என்பதல்லவா பிரச்னை? அதுவும் எப்படிப்பட்ட ஜீவஹிம்ஸை!
ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றாலும் பாதகமில்லையே! யாகத்திற்காக வதைக்கப்படும் ஆடுகள் மகா பயங்கரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டல்லவா கொல்லப்படுகின்றன. கசாப்புக் கடைகளிலே கூட, கூடியவரை பிராணிகளுக்குத் துன்பம் நீடிக்காத வகையில் கொல்லவேண்டுமென்று சட்டங்கள் இருக்கின்றனவே?
“இதெல்லாம் வேதத்தில் சொல்லியிருக்கிறபடிதானே செய்கிறோம்?” என்று சொல்லுகிறார்கள்.
வேதத்தின் கர்மகாண்டத்தில் யாகங்கள் விதிக்கப் பட்டிருப்பது ஏன் என்பதற்குப் பெரியோர்கள் சொல்லும் காரணத்தைச் சற்று கவனிப்போம்.
ஆதி காலத்தில் இந்தியாவில் வசித்த மக்கள் அனைவரும் மாம்ஸ பக்ஷிணிகளாய் இருந்தார்கள். பாரமார்த்திக ஞானமும், ஜீவ காருண்ய உணர்ச்சியும் அதிகமாக ஆக, மகான்கள் சிலர் தோன்றி மாம்ஸ போஜனத்துக்குச் சில வரையறைகள் ஏற்படுத்த முயன்றார்கள்.
இதற்காக யாகத்தில் அவிர்ப்பாகம் கொடுத்த பின் சேஷமாகும் மாம்ஸத்தை மட்டுமே உட்கொள்ளலாமென்று ஏற்படுத்தினார்கள். யாகம் செய்வது மிகவும் பிரயாசையாதலின் இந்த நிபந்தனையினால் மாம்ஸ போஜனம் பெரிதும் மட்டுப்படும் என்பது அவர்கள் கருத்து.
பிற்காலத்தில் சமூகம் பாரமார்த்திகத் துறையில் இன்னும் அதிக முன்னேற்றம் பெற்றுப் பக்குவம் அடைந்திருந்தபோது கருணாமூர்த்தியான புத்த பெருமான் தோன்றினார். யாகக் கொலையைக் கூட அவர் நிறுத்த முயன்று வெற்றியும் அடைந்தார். அது முதல் நமது நாட்டில் யாகங்கள் பெரிதும் குறைந்து போயிருந்தன.
தெய்வ பித்ரு காரியங்களில் நமது மூதாதையர்கள் மாம்ஸத்தை உபயோகித்த அநேக இடங்களில் நாம் தானியங்களையும், காய்கறி பதார்த்தங்களையுமே நூற்றுக் கணக்கான வருஷங்களாய் உபயோகப்படுத்தி வருகிறோம்.
தர்ம மார்க்கத்தில் சமூகம் இவ்வளவு முன்னேற்றமடைந்த பின்னர் இப்பொழுது மறுபடியும் ஆட்டு வதை புரிந்த அந்த நாளைக்குத் திரும்பிப்போக வேண்டுமென்று சொல்லுதல் எவ்வளவு மதியீனம் என்று சொல்லவும் வேண்டுமா?
தமிழ்நாட்டுப் பிராம்மண சமூகத்துக்கு “விகடன்” வணக்கத்துடன் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளுகிறான். இக்காலத்தில் பொதுவாகப் பிராம்மணர்கள் மீது மற்ற வகுப்பாருக்குள் அதிருப்தி பரவியிருக்கிற தென்பதையும், அதை மேலும் மேலும் வளர்ப்பதற்குச் சிலர் இடைவிடாத முயற்சி செய்து வருகிறார்களென்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இந்த அதிருப்தி சிறிதளவு காரணத்துடனும், பெரும்பாலும் காரணமில்லாமலும் பரவியிருக்கின்றது. பிராம்மண சிரேஷ்டர்களில் சிலர் ஸநாதன தர்மத்தின் பெயரால் தேச முன்னேற்ற இயக்கங்களுக்கெல்லாம் குறுக்கே நின்று கூச்சலிடுவதின் பயனாக ஏற்படும் அதிருப்தி காரணத்துடன் ஏற்படுவதாகும்.
அதெல்லாம் போகட்டும். கும்பகோணத்தில் நடந்தது போன்ற வாஜபேய யாகங்களினால் பிராம்மண சமூகம் மற்றவர்களின் பரிகாசத்திற்கும் அருவருப்புக்கும் இடமாகி வருகிறதென்பதை நீங்கள் பிரத்தியக்ஷமாய்ப் பார்க்கவில்லையா?
ஆகையால், வேதவித்துக்களாகிய பெரியோர்களே! ஆடுகளும், பிள்ளையில்லாத ஸ்திரீகளும், நன்றிகெட்ட சர்க்காரும், பக்தியற்ற பிரஜைகளும் எப்படியாவது தொலைந்து போகட்டுமென்று விட்டுவிட்டுச் சிவனே யென்று உங்கள் சொந்த மோக்ஷத்திற்கு வேறு வகையில் வழிதேடிக் கொள்ளுங்கள். வேண்டாம் இந்த வெட்கக்கேடு!” என்று அந்த கட்டுரையை நிறைவு செய்கிறார் அமரர் கல்கி.
வானதி பதிப்பகம் வெளியிட்ட, ‘மகாத்மாவுக்கு விண்ணப்பம்’ என்ற அமரர் கல்கியின் கட்டுரைத் தொகுப்புக்கு கல்கி ராஜேந்திரன் எழுதியுள்ள முன்னுரையில், ‘90 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல பிரச்சினைகள் இன்றைக்கும் நீடிக்கின்றன என்பதால், அவை பற்றிய கல்கியின் கருத்துகளை நாம் அறிவது சாத்தியமாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலாண்டு தேர்வு நீட்டிக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!
Comments are closed.