ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா? – திருமா பதில்!

Published On:

| By Selvam

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (செப்டம்பர் 25) தெரிவித்துள்ளார்.

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி திமுக – விசிக கூட்டணியில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக வட மாவட்டங்களில் விசிக துணை இல்லாமல் திமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் சினிமாவில் இருந்து வந்தவர்களெல்லாம் துணை முதல்வராகும் போது எங்கள் தலைவர் திருமா முதல்வராகக்கூடாதா? என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா, ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களான ரவிக்குமார், வன்னியரசு உள்ளிட்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்தநிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன்,  “திமுக மற்றும் விசிக ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளிடையே எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று என்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியான வீடியோவை பலரும் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டார்கள். அந்த விவாதம் மேலும், மேலும் விவாதங்களுக்கு இடமளித்துவிட்டது. அதனால் திமுக – விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது. எழுவதற்கும் வாய்ப்பில்லை” என்றார்.

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆ.ராசா பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “கட்சியின் முன்னணி நிர்வாகிகளோடு கலந்து பேசிதான் உட்கட்சி  விவகாரங்கள் தொடர்பான எந்த முடிவையும் எடுப்போம்.

இந்த விவகாரம் தொடர்பாக பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் , உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் நான் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிக ரிஸ்க்குள்ள கேரளாவில் அணு உலைகளா? கிளம்பிய எதிர்ப்பு!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share