தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திற்கு இன்று (ஜூலை 31) சென்றிருந்த விசிக தலைவர் திருமாவளன் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,”இழப்பீட்டினால் இந்த துயரத்தை துடைத்து எறிய முடியாது. மெத்த படித்தவர். மென்பொருள் பொறியாளர். கை நிறைய சம்பளம் பெறும் அளவுக்கு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டவர். வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடாதவர் என சொல்லக்கூடிய அளவுக்கு அனைவரோடும் மிகுந்த கனிவோடு பழகக்கூடிய பண்பு உடையவர் என கவினின் பெற்றோரிடம் பேசியதிலிருந்து உணர முடிந்தது.
அப்படிப்பட்டவரை நயந்து பேசி நம்ப வைத்து வரவழைத்து இந்த கொடூரமான படுகொலையை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு பேருக்கும் இடையே உறவு. அது காதலாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி. அந்த உறவு இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கிறது. இருதரப்பினரும் இது தேவையற்றது என ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்திருக்கின்றனர்.
தனது தாத்தாவிற்கு சிகிச்சை பெறுவதற்காக நெல்லைக்கு வந்திருக்கிறார். அப்போது சுபாஷினியிடம் இது பற்றி பேசி இருக்கிறார். அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கூறியிருக்கிறார். கவின் தன் அம்மாவோடு தாத்தாவை அழைத்துக் கொண்டு தான் மருத்துவமனைக்கு உள்ளே சென்று இருக்கிறார். ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததால் வெளியே வந்திருக்கிறார்.
அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியில் வருவதற்கு அதிகபட்சம் 20 நிமிடங்கள் இருக்கும். அதற்குள் கவினை அழைத்துச் சென்று ஓர் இடத்தில் வைத்து மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்து இருக்கிறார்கள்.

தனி ஒரு நபராக கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை!
மருத்துவமனைக்கு வந்த 20 நிமிடங்களில் இது எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது என விசாரணையில் தெரிய வருகிறது. வெளியே வந்து மகனை காணவில்லை என்று தேடுகிற போது அவரது தொலைபேசிக்கு அழைக்கையில் யாரோ ஒருவர் தொலைபேசியில் எடுத்து ஒரு விபத்து என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.
அப்படி சொன்னவர்கள் காவல் துறையை சார்ந்தவர்கள் என்பது அங்கு சென்ற பிறகு தெரியவந்துள்ளது. இந்த காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்றெல்லாம் சொல்லாமல் கவினின் தாயாரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மூன்று மணி நேரம் அங்கேயே அமர வைத்து அவருக்கு எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் சொல்லாமல் அலைக்கழித்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம் காவல் துறையினருக்கு முன் கூட்டியே தெரிந்து இருக்க வாய்ப்பிருக்கிறது. தனக்குத் தெரிந்த காவல் அதிகாரியின் எல்லைக்குள்ளையே இதை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த எல்லைக்குள்ளையே வந்து அவர்கள் இந்த படுகொலையை செய்திருக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறது.
எனவே தனி ஒரு நபராக இந்த கொலையை அவன் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அவன் மட்டுமே கொலை செய்தான் என்று வழக்கை முடிப்பதற்கு அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முயற்சித்து இருக்கிறார்கள்.
இதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை சுர்ஜித் என்பவர் மட்டும்தான் இதில் சம்பந்தப்பட்டவர் என்று புகார் எழுதிக் கொடுங்கள் எஃப் ஐ ஆர் போடுகிறோம் என்று தொடக்கத்தில் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு கவினின் தாயார் உடன்படவில்லை பிறகு கவின் பெற்றோர் தரப்பில் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டு தான் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
எது எப்படியாக இருந்தாலும் சுர்ஜித் மட்டுமல்ல. அவருடைய தந்தை, தாய் ஆகியோருக்கும் இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்ட காரணத்தினால் தான் காவல்துறை எஃப்ஐஆர் -ல் அந்த பெயரை சேர்த்து இருக்கிறார்கள்.
என்ன தயக்கம்?
எஃப்ஐஆர் -ல் இடம் பெற்றுள்ளவர்களை கைது செய்வதில் என்ன தயக்கம்? புதிதாக சந்தேகத்தின் பெயரில் யார் பெயரையும் நாங்கள் இணைக்க சொல்லவில்லையே என்பதுதான் கவின் தரப்பில் தந்தையினுடைய கேள்வி. இதில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
எனவே தமிழ்நாடு அரசு காவல்துறை உடனடியாக அதில் தொடர்புடைய எஃப்ஐஆர்-ல் இடம் பெற்றிருக்கிற சுர்ஜித் தாயாரையும் சட்டப்படி கைது செய்து புலன்விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
கூலிப்படை கைவரிசையா?
தென் மாவட்டங்களில் நடந்திருக்கிற இதுபோன்ற கொலைகளுக்கு பின்னால் கூலிப்படையினரின் கைவரிசை இருந்திருக்கிறது. ஆகவே இவர் திடீரென ஆத்திரப்பட்டு இதைச் செய்யவில்லை. கவினோடு முரண்பட்டும் உறவாடவில்லை. நம்பக்கூடிய அளவிற்கு நெருக்கமாக உறவாடி இருக்கிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர் அழைத்தவுடன் கவின் அவரோடு போயிருக்கிறார். எனவே இது நீண்ட கால செயல்திட்டமாக தெரிகிறது. காவல்துறையினர் குறிப்பாக சிபிசிஐடி புலனாய்வு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதில் முறைப்படி சட்டபூர்வமான விசாரணை செய்யப்பட வேண்டும். சுர்ஜித் பெற்றோர் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தினால் தான் பின்னால் உள்ள கூலிப்படையினர் யார் என்பதையும் கண்டறிய இயலும் என்பதுதான் கவினின் தந்தை சந்திரசேகர் முன்வைக்கும் கோரிக்கை.
நீதியும் பாதுகாப்பும் உறுதிப்படுத்த வேண்டும்!
கவின் உடலை நீண்ட நாட்கள் நீங்கள் பிண அறையில் போட்டு வைக்க வேண்டாம். நல்லபடியாக அடக்கத்தை செய்ய தயாராக இருக்கிறோம் என்று நாங்கள் கேட்கும் அதே நேரத்தில் நீதி மறுக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே எங்களோடு உடன் நிற்கின்ற உள்ளூரைச் சார்ந்த தோழர்கள், உறவினர்கள் அனைவரோடும் நான் கலந்து பேசி தான் முடிவெடுக்க முடியும் என்ற கருத்தை கவினின் தந்தை சொல்லி உள்ளார்.
எந்த முடிவை அவர்கள் எடுத்தாலும் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். சுபாஷினியின் தாய் தந்தை இருவரையும் கைது செய்ய வேண்டும் தண்டிக்க வேண்டும் என்பதுதான் கவின் குடும்பத்தினரின் வேண்டுகோளாக இருக்கிறது” என்றார்.
மேலும் அவர், “வன்கொடுமை சட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்ன இழப்பீடுகளை தர வேண்டுமோ அந்த இழப்பீடுகளை தர வேண்டும். அரசு வேலைவாய்ப்பு தரவேண்டும். அவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். புதிய வீடு கட்டி தர வேண்டும். இவையெல்லாம் சட்டப்பூர்வமாக இருக்கிற உரிமைகள். எனவே அதில் எந்த தேக்கமும் ஏற்பட்டு விடாத வகையில் வழங்க வேண்டும். முதல்வர் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியும் வழங்க வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்றால் இவர்களை அச்சுறுத்தி நிலைகுலைய வைக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் கொண்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக திருமாவளவன்” என்று தெரிவித்துள்ளார்.
சுபாஷினி அச்சுறுத்தலில் இருக்கிறார்!
மேலும் சுபாஷினி பேசி உள்ளதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் எனக்கும் கவினுக்கும் இருந்த உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். அது எங்களோடு முடியட்டும் என்று அவர் சொல்லியுள்ளார்.
அவர் பேசி இருக்கும் செய்திகளை பார்க்கும்போதும், அவருடைய உடல் மொழிகளை பார்க்கும் போதும் அவர் யாரோ ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார். அச்சுறுத்தலில் இருக்கிறார். யாரோ சொல்லச் சொல்லி அப்படி சொல்கிறார் என்று தான் என்ன தோன்றுகிறது. அவர் சுதந்திரமாக பேசுவதாக தெரியவில்லை.
சாதியவாத அமைப்புகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி கவின் உடைய நடத்தையை கொச்சைப்படுத்தக்கூடிய வகையிலேயே அவதூறுகளை பரப்புகிறார்கள். இது தேவையற்ற சமூக பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே காவல்துறையினர் குறிப்பாக சைபர் கிரைம் போலீசார் ஊடகங்களில் பரப்பக்கூடிய அவதூறுகளை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.