முதல்வர் ஸ்டாலினை மீண்டும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அந்த கூட்டணியின் உறவை முறித்துக்கொள்வதாக இன்று (ஜூலை 31) காலை அறிவித்தார். தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தார் ஓபிஎஸ்.
என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி விலகியது தமிழக அரசியலில் விவாதத்துக்கு உள்ளானது.
இந்தநிலையில் மாலையில், ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஆழ்வாழ்பேட்டையில் உள்ள முதல்வரின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து பேசி வருகிறார். அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஓ.பி.ரவிந்திரநாத்தும் உடன் சென்றுள்ளார்.
ஏற்கனவே இன்று காலை அடையாறு பூங்காவில் நடைப்பயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த ஓபிஎஸ் நலம் விசாரித்தார். இந்தநிலையில் மீண்டும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம் புதிய தலைமுறையிடம் கூறுகையில், முதல்வரின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க முதல்வரின் வீட்டுக்கு ஓபிஎஸ் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
