ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்! எடப்பாடி அதிர்ச்சி- பாஜக மிரட்சி! நடந்தது இதுதான்…

Published On:

| By Mathi

OPS Meets MK Stalin

வைஃபை ஆன் செய்ததுமே, “என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” என தாளம் போட்டபடியே டைப் செய்ய தொடங்கியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து (NDA) வெளியேறுவதாக ஓபிஎஸ் (OPS Faction) தலைமையிலான அதிமுகவின் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜூலை 31-ந் தேதி 3 மணி நேரம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போதைக்கு எந்த கட்சியுடனும் உறவு இல்லை; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாஜக- அதிமுக கூட்டணி உறுதியானது முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ்-ன் இருப்பு கேள்விக்குள்ளானது. சென்னையில் பாஜக- அதிமுக கூட்டணியை அமித்ஷா அறிவித்த போது, ஓபிஎஸ்- தினகரன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என அமித்ஷா பதில் அளித்திருந்தார். இது ஓபிஎஸ் தரப்பை ரொம்பவே அப்செட் ஆக்கியிருந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது ஓபிஎஸ் அணி. ஆனாலும் விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை என்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரொம்பவே தத்தளித்துப் போனது ஓபிஎஸ் தரப்பு.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தந்த போது, அவரை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதி இருந்தார். முன்னாள் முதல்வர், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒரு அணியின் தலைவர் என்ற நிலையிலும் கூட மிகவும் கெஞ்சிக் கேட்டு அந்த கடிதத்தை ஓபிஎஸ் எழுதி இருந்தார்.

ADVERTISEMENT

ஆனாலும் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை மிக கடுமையான கோபத்துக்குள்ளாக்கியது. அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், வெளிப்படையாகவே, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசினார்.

அத்துடன் இதுபற்றி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஓபிஎஸ் பேசிய போது, எவ்வளவோ முயற்சித்த போதும் என்னால் நேரம் வாங்கித் தர முடியவில்லை. பிரதமர் மோடி அடுத்த முறை தமிழகம் வரும் போது முயற்சிக்கிறோம்’ என கூறியிருக்கிறார்.

இது பற்றி ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசன நடத்திய போதும் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர், இனியும் பாஜகவை நம்பவே வேண்டாம்.. இதுவரை நம்பியதும் போதும் என கறாராகவே சொல்லிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கான கல்வி நிதி விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டார் ஓபிஎஸ். அத்துடன் ஜூலை 31-ந் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் ; அந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்தார்.

இதனிடையே ஜூலை 29-ந் தேதி விஜய் தரப்பை ஓபிஎஸ் அணி மீண்டும் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது, “நாங்க 4 எம்.எல்.ஏக்கள் இருக்கிறோம். ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் என உங்க கூட்டணிக்கு 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது ரொம்பவும் முக்கியமான அரசியல். அதனால் நாங்க தனிக்கட்சி தொடங்கி உங்களுடன் கூட்டணி அமைக்கிறோம்” என்றும் திரும்ப திரும்ப பேசியிருக்கின்றனர்.

இதனை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட விஜய் தரப்பு, ‘ஜனவரி மாதம் சொல்கிறோம்’ என சொல்லிவிட்டது.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன், கடந்த மார்ச் மாதம் விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். அப்போதும், “ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்திக்கப் போகிறேன். அந்த சந்திப்பு எல்லாம் முடித்த பிறகு வருகிற ஜனவரி மாதம் கூட்டணி தொடர்பாக என்னுடைய இறுதி முடிவை சொல்கிறேன” என கூறியதை நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம். தற்போது அதேபோலவே, ஓபிஎஸ்-க்கும் ‘ஜனவரி மாதம் சொல்கிறோம்’ என பதில் சொல்லி இருக்கிறது விஜய் தரப்பு.

இதனால் விஜய் தரப்பு எப்படியும் கூட்டணிக்கு அழைக்கும் என மலைபோல நம்புகிறதாம் ஓபிஎஸ் அணி.

இந்த நம்பிக்கையில்தான், ஓபிஎஸ் இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில். “பாஜகவுடனான கூட்டணியை 1999-ல் ஜெயலலிதா முறித்தது வரலாற்றுப் பிழை அல்ல; வரலாற்றுப் புரட்சி” என கூறியிருந்தார். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவது உறுதியானது.

இந்த பரபரப்புகளுக்கு இடையேதான் இன்று சென்னையில் ஓபிஎஸ் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், “பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடு நன்கு அறியும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம்.. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறோம்” என அறிவித்தார்.

ஓபிஎஸ் அணி ஏற்கனவே புதிய அரசியல் கட்சியை தொடங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனால் அடுத்த சில நாட்களிலேயே புதிய அரசியல் கட்சியை ஓபிஎஸ் அணி அறிவிக்கக் கூடும்.

இதற்கு இடையே ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து திமுக தரப்பை நோக்கி நகரும் மூவ்கள்தான் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வாக்கிங் செல்லும் அடையாறு தியாசபிகல் சொசைட்டி பகுதியில் இன்று ஜூலை 31-ந் தேதி காலை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லி படங்கள் வெளியாகின.

இந்த சந்திப்பில் முதல்வரிடம் நலம் விசாரித்த போதே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். அப்போது. “மாலையில் வீட்டுக்கு வாங்க பேசலாம்” என சொல்லி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதனையடுத்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் ஓபிஎஸ். இதனால் திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைகிறாரா? என புதிய விவாதமும் களைகட்டி இருக்கிறது.

இது பற்றி திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, பாஜகவுடனான உறவை ஓபிஎஸ் முறித்துக் கொண்டதால் திமுக, விஜய் கட்சி என இரு கூட்டணிக்கான வாய்ப்புகளை ஓபிஎஸ் பெற்றிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே எங்களுடன் ரகசியமான தொடர்பில் இருந்தவர்தானே ஓபிஎஸ். அதே நேரத்தில் ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில் யாரையோ மிரட்டிப் பார்க்கத்தான் இத்தகைய அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதாகவும் பார்க்கலாம். ஒருவேளை எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என ‘உண்மையிலேயே’ முடிவு செய்து திமுகவுடன் ஓபிஎஸ் கை கோர்க்க முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான் என்கின்றனர் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share