அ. குமரேசன் the political impact of mgr and ntr part 2
அன்றைய சினிமாவும் அரசியலும்!
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் பல நடிகர்களுக்கு அரசியல் கனவை ஏற்படுத்தினார் என்றாலும், அவர் நேரடியாக சினிமாவை முடித்துக்கொண்டு கட்சியைத் தொடங்கிவிடவில்லை. தி.மு.க வளர்ச்சியோடும் இணைந்து பணியாற்றினார். படங்களில் அப்பழுக்கற்ற நாயகனாக, மற்றவர்களின் கண்ணீர் துடைக்கும் காவலனாக என்று திட்டமிட்ட முறையில் தனது கதாபாத்திரங்களை வடிவமைத்தவர் (அல்லது அவ்வாறு வடிவமைக்க வைத்தவர்).
திமுக–வின் அரசியல் கருத்துகளையும் எதிரொலித்தார். அந்தக் கட்சியின் முக்கியமான பரப்புரை நட்சத்திரமாக மாநிலம் முழுதும் சுற்றிவந்தார். அவருடைய முகத்தைக் காண்பதற்குத் திரண்ட மக்களைப் பார்த்த திமுக தலைவர் அண்ணா, அது தேர்தலில் வாக்குகளாக மாறும் என்று சரியாகக் கணித்தார். அது நடந்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞருக்கும் அவருக்கும் இடையே முளைத்த நீயா நானா போட்டியில், “கணக்குக் காட்டும்” விவகாரத்தைக் கிளப்பி, பொருளாளராக இருந்தவர் அடிப்படை உறுப்பினரும் அல்ல என்று 1972 அக்டோபர் 10 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்காகவே காத்திருந்தவராக அக்டோபர் 17 அன்று புதிய கட்சியைத் தொடங்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார். 1977 சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியுடன் முதலமைச்சரானார்.

1987இல் உடல்நலம் குன்றி இறக்கும் வரையில் (இடையில் 1980இல் சில மாதங்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டிருந்த காலம் தவிர்த்து) முதலமைச்சராக இருந்தார். அதே போல, ஜெயலலிதாவும் திடுதிப்பென்று அரசியல்வாதியாகிவிடவில்லை. அதிமுக–வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் மாநிலம் முழுதும் சுற்றி, அமைப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தனது அரசியல் வாரிசு அவர்தான் என்று எம்ஜிஆர் பல கட்டங்களில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அவர் காலமானதும், அவரது இணையரும், முன்னாள் நடிப்புக் கலைஞருமான ஜானகியை ஜெயலலிதா எதிர்ப்பாளர்கள் முதல்வர் இருக்கையில் அமர வைத்தார்கள். அது நிலைக்கவில்லை. கட்சி அமைப்புக்கு உள்ளேயும், தேர்தல் களத்திலும் தனது செல்வாக்கை மெய்ப்பித்துக் காட்டிய ஜெயலலிதா 1991 தேர்தலில் வெற்றி பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சரான முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார். the political impact of mgr and ntr part 2
சினிமாவில் இருந்து நேரடி அரசில்!

சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங்கி உடனே ஆட்சியையும் பிடித்தவர் ஆந்திராவின் என்.டி. ராமாராவ்தான். முதலிலேயே குறிப்பிட்டது போல, பல தொடக்கக் காலப் படங்களில் கடவுளாகவும், பிற்காலப் படங்களில் வீர நாயகனாகவும் மக்களைக் காத்தார் என்பதால் ரசிகர்கள் தங்கள் மனங்களில் பக்தியோடு அவரைக் குடியேற்றி வைத்திருந்தார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் நடித்துக்கொண்டிருந்தபோதே அரசியல் பின்னணியோடும் செயல்பட்டவர்கள்தான்.
சந்தை அரசியல் இவ்வாறு, அரசியலுக்கு வராமலே, சினிமாச் சந்தை அரசியலைச் செய்துகொண்டிருக்கிற நட்சத்திர நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். சிலர் நற்பணி மன்றங்கள் என அமைத்து, அவற்றின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்கிறார்கள். ஒருவகையில் மக்களிடமிருந்து கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியை மக்களுக்கே திருப்பிக் கொடுக்கும் மனநிறைவை அடைகிறார்கள் எனலாம்.

“தொடக்கத்திலிருந்தே ரசிகர் மன்றம் அமைக்கக்கூடாது என்று தடுத்துவிட்டவர் கமல்ஹாசன். அவரது படங்கள் வருகிறபோது ரசிகர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலும் செலவிலும்தான் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். வெறும் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக நடத்துவதற்குக் கட்டாயப்படுத்தினார். மன்றத்தின் நற்பணிகளுக்கான செலவும் ரசிகர்களுடையதே.
சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தைக் கூண்டோடு கலைத்துவிட்டவர் அஜித் குமார். “ரசிகர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தில்தான் தடபுடல்கள் செய்து வருகிறார்கள், அவர் சிறிதும் பணம் தருவதில்லை,” என்று தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் டி.வி. சோமு.
சூர்யா, அவரது தம்பி கார்த்தி இருவரும், ‘அகரம்’ அமைப்பு மூலமாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி–கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பான பணியாற்றி வருகிறார்கள். அந்த அனுபவத்திலிருந்துதான் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை சூர்யா விமர்சித்தார் போலும்.

tசந்தை உறுதியைத் தக்கவைப்பதற்காக ரசிகர் மன்றங்களை நற்பணிகளில் ஈடுபடுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். சூர்யா, விஜய் சேதுபதி, போன்றோர், விதிவிலக்காக, வழிபாட்டு மன்றங்களாக மாற்றிவிடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்துவதையும் காண முடிகிறது. அரசியலுக்கு வருகிறார்களோ இல்லையோ, தங்களின் மனம் கவர்ந்த நடிகர்களுக்கு மன்றம் அமைத்து ஆராதிக்கிற நடைமுறையின் உளவியலையும் அரசியலையும் சமூகவியலையும் எப்படிப் புரிந்துகொள்வது?
கிராம தெய்வங்கள்!
பிற நாடுகளில் இந்த ரசிகவியல் எவ்வாறு இருக்கிறது? கிராம சாமிகளிடம் விடை? கற்பனையான கதைகளில் சாகசங்கள் நிகழ்த்துகிற வீரர்களாக நடிக்கிற கலைஞர்களை அப்படிப்பட்ட நாயகர்களாகவே ஏற்றுக் கொண்டாடும் மனநிலை எப்படி வந்தது? இதற்கான பதிலைக் கிராம தெய்வ வழிபாட்டில் தேடிப்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
மாரி, காளி, இசக்கி, பச்சை, செல்லி, பொன்னி, சீலைக்காரி, முப்பிடாரி, காத்தாயி, பூவாள், மறலி, பூங்காவனம் ஆகியோரும் மேலும் பல அம்மன்களும் வணங்கப்படுகிறார்கள். அய்யனார், கருப்பு, முனீஸ்வரன், மதுரை வீரன், சுடலை மாடன், சன்னாசி, இருளப்பன், மாசி கருப்பன், சந்தன கருப்பண்ணன், முன்னோடியான், கோட்டை முனியப்பன், கொம்புக்காரன் கருப்பு, ஒண்டிவீரன், சப்பாணி, பேயாண்டி, மாயாண்டி, விரும்பாண்டி, பலவேசம் உள்பட பல ஆண் சாமிகள் வழிபடப்படுகிறார்கள். பல கிராமங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே வணங்கப்படும் தெய்வங்களும் உண்டு. t

கிராம தெய்வங்களாக வணங்கப்படுகிறவர்கள் உண்மையில் வீரச் செயல்களில் ஈடுபட்டவர்கள்தான். இயற்கைப் பேரிடர்களிலிருந்தோ, ஊருக்குள் ஊடுருவிய எதிரிகளிடமிருந்தோ மக்களைக் காப்பதற்குப் போராடியவர்கள். அந்தப் போராட்டங்களில் உயிரிழந்தவர்கள். ‘திரைப்பட ரசிகர்கள் பற்றிய கட்டுரை என்பதால் ஒரு திரைப்படத்தையே இங்கே எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம். the political impact of mgr and ntr part 2
பரட்டைத் தலையும் பாடுகின்ற வாயுமாகத் திரியும் வெள்ளைச்சாமி, இளம் காதலர்களை வெறிக்கூட்டத்திடமிருந்து காப்பதற்காகத் துணிந்து நிற்பான். அவர்கள் போன பிறகும் அப்படியே நின்றுகொண்டிருப்பான். அருகில் சென்று பார்க்கிறபோதுதான் முதுகில் கத்திக்குத்துப்பட்டு இறந்துவிட்டான் என தெரியவரும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி உள்ளிட்டோர் நடித்து 1984இல் வெளியான ‘வைதேகி காந்திருந்தாள்’ படத்தின் இந்தக் கடைசிக் காட்சி, கிராமத்தின் அய்யனார் சிலை முன்பாக நாயகன் அசையாமல் நிற்பது போல எடுக்கப்பட்டிருக்கும். அது அந்தக் கதாபாத்திரத்திற்கு உணர்வுப்பூர்வமான இணைப்பைக் கொடுக்கும்.

கிராமங்களில் இவ்வாறு மற்றவர்களுக்கான போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் தொடக்கத்தில் வீரத் தியாகிகளாக வணங்கப்பட்டார்கள் (இறந்துபோகிறவர்களின் படங்களுக்கு பூ வைத்து வணங்குகிற பழக்கம் இப்போதும் பல குடும்பங்களில் இருக்கிறதல்லவா, அதைப் போல). காலப்போக்கில் அந்த வீரர்கள் பற்றிய உண்மைத் தகவல்களோடு, அவர்கள் கடவுள்களுக்குப் பிறந்தவர்கள் என்பது போன்ற புனைவுகள் சேர்ந்து தெய்வப் பிறவிகளாக வழிபடுகிற நடைமுறைகள் உருவாகின.

கிராமத்துப் பெண் தெய்வங்களைப் பொறுத்தவரையில் வீரமிகு போராட்டங்களில் உயிர்நீத்தவர்களும் உண்டு, காதல் உள்ளிட்ட காரணங்களுக்காக உயிரைத் தாங்களே நீக்கிக்கொள்ளும்படி தள்ளப்பட்டவர்களும் உண்டு. அவர்கள் சக்தியின் அவதாரங்கள் என்ற புனைவுகளும் உண்டு. மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்களில் சிலரது பெயர்களுக்கு முன்பாக “ஸ்ரீ” என்ற ஒட்டு சேர்க்கப்பட்டு, “தெய்வீகமயமாக்கல்” நடந்தது, சில கிராமத்துக் கோயில்களுக்குள் சமஸ்கிருத மந்திரங்களும் நுழைந்தன. எளிய கிராமத்து சாமிகள் எளிய மக்களிடமிருந்து ஒரு படி மேலே ஏற்றிவைக்கப்பட்டடார்கள்.
இன்றைய ஏஐ யுகமும் சினிமாவும்!
ஏஐ யுகத்தில்… உண்மை வாழ்க்கைப் பின்னணியுடன் கிராம தெய்வங்களைக் கொண்டாடும் இந்த மரபோடு, முற்றிலும் புனைவுக் கதைகளான திரைப்படங்களின் நாயக நடிகர்கள் மீதான அளவு கடந்த பற்றை அப்படியே ஒப்பிட்டுவிட முடியாதுதான். ஆனால், தங்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களைப் போற்றுவதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

தொடக்கத்திலாவது மக்களின் கல்வி நிலை, திரைப்படத் தொழில்நுட்பம் குறித்த புரிதலின்மை ஆகிய பின்னணிகள் இருந்தன. ஆகவே, திரையில் எம்ஜிஆர் அநியாயக்காரர்களோடு மோதி வீழ்த்துவதைப் பார்த்து, உண்மை வாழ்க்கையிலும் அவர் அப்படிப்பட்டவர்தான் என்று நம்பினார்கள். அவரது ரசிகர்கள் பலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் தங்களுடைய நேரடி எதிரிகளை முறியடிப்பது பற்றிய கனவுகளோடு அவருடைய விசுவாசிகளானார்கள் என்றும் கூறலாம்.
ஆனால் இன்று, நகரம்–கிராமம் என்ற வேறுபாடின்றி மக்களுக்குத் திரைப்பட நுட்பங்கள் பற்றித் தெரிந்திருக்கிறது. ஒளிப்பதிவுக் கோணங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். வரைகலைப் பயன்பாடுகளைக் கவனிக்கிறார்கள். பத்தாவது மாடியிலிருந்து தரையில் குதித்தது தங்களின் நாயக நடிகரல்ல, அது கணினி வரைகலையின் ஜாலம் என்று புரிந்துகொள்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் புண்ணியத்தில், நாயகனின் இளவயதுப் பதிப்பைத் திரையில் பார்த்து ரசிக்கிறார்கள். அந்தக் காட்சிகளுக்கான கைதட்டல்கள் அந்த நட்சத்திரங்களுக்குப் போகின்றன என்றாலும், உண்மையில் அவை அதை சாத்தியமாக்கிய கணினி வல்லுநர்களுக்கு உரியவை.
நவீன தொழில்நுட்பத்தின் சாகசங்களைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்றாலும் நாயக நட்சத்திரங்கள் மீதான ஈர்ப்பு அப்படியே தொடர்கிறது. புதுப்படம் வெளியாகும் திரையரங்குகளின் முன்பாக, சாலையில் போக்குவரத்து தடைப்படுகிற அளவுக்குக் கூட்டம் சேர்கிறது, தாரை–தப்பட்டை என தூள் கிளப்பப்படுகிறது, காவல்துறை தலையிட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. the political impact of mgr and ntr part 2

தங்களின் வீடுகளில், வாகனங்களில், கைப்பேசிகளில் நட்சத்திரங்களின் படங்களை வைத்திருக்கிறார்கள், சிலர் தங்களின் கைகளிலும் நெஞ்சிலும் பச்சை குத்திக்கொள்கிறார்கள். அந்த ஈர்ப்பின் அடிப்படையில் திரையரங்குகளின் முன் கூட்டம் சேர்ப்பதிலும் திருவிழா போலக் கொண்டாடுவதிலும் பச்சை குத்திக்கொள்வதிலும் ரசிகர் மன்றங்களின் செயல்திட்டங்கள் இருக்கின்றன. மன்றங்களின் பொறுப்புகளில் இருப்பவர்கள் வட்டாரத் தலைவர்கள் போல அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறார்கள். the political impact of mgr and ntr part 2

“இப்படிப்பட்டவர்கள் பொது இயக்கத்திற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்று பெருமூச்சு விட்டார் அரசியல் களப்போராளித் தோழர் ஒருவர். ஒரு திரையரங்கில் படத் தொடக்கவிழாத் தடபுடல்களைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது இந்த ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். “பொதுப் பிரச்சினைக்காக மக்கள் போராட்டம் என்று அறிவிக்கிறோம், ஆனால் அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள். மக்களை ஒரு பகுதி அளவுக்காவது திரட்டி ஈடுபட வைக்கும் திறன் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் வராமல் இப்படி ரசிகர் மன்றங்களோடு நின்றுவிடுகிறார்களே…” என்றார்.
மூன்று இயல்கள் இதற்கு உளவியல், சமூகவியல், அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்று சில கட்டுரைகளில் படித்திருக்கிறேன். ஒருவருக்கு உளவியல் காரணம், இன்னொருவருக்கு சமூகக் காரணம், வேறொருவருக்கு அரசியல் காரணம் என இருக்கலாம் என்று மேலோட்டமாகத் தெரிகிறது. ஆனால், ஆழத்தில் இந்த மூன்று காரணங்களுமே கலந்து செயல்படுகின்றன என்றே கருதுகிறேன்.
ஒருவர் தனக்கான அடையாளத்தை நிறுவிக்கொள்கிற நாட்டத்துடன் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய இயல்பான, நியாயமான நாட்டம்தான் இது. அரசியல் களத்திலோ, சமூக வெளியிலோ சுய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வது எளிதானதாக இல்லை என்பதை அறிவோம். அதற்குப் பண பலம், ஆட்களைச் சேர்க்கும் வழிமுறையில் தனித்திறன் என்றெல்லாம் தேவைப்படுகின்றன. பணமும், ஆட்களின் துணையும் இருந்தால் கூட தன்னடையாளத்தை நிறுவிக்கொள்வது எளிதானதாக இல்லை. the political impact of mgr and ntr part 2
ஏற்கெனவே சட்டாம்பிள்ளைகளாகக் கம்பு சுற்றிக்கொண்டிருப்பவர்கள் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக வைத்துக்கொள்வார்களே தவிர இணையான புதிய சட்டாம்பிள்ளைகளாகக் கம்பைக் கையிலெடுக்க விடுவதில்லை. ஆகவே, இங்கே எளிதான வழியை ரசிகர் மன்றம் திறந்துவிடுகிறது. the political impact of mgr and ntr part 2

மனசுக்குப் பிடித்த நடிகரின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்துவிட முடியும் என்ற மகிழ்ச்சியோடு, அந்தந்தப் பகுதியில் விளம்பரப் படங்களை ஒட்டுவது, திரையரங்க அனுமதிச் சீட்டுகள் விற்பனை செய்வது, வாங்கியவர்களைப் படத்திற்கு அழைத்துச் செல்வது, அரங்கிற்குள் வண்ணத் தாள்களைக் கொட்ட வைப்பது, படம் முடிந்த பின் வெளியே காத்திருக்கும் யூட்யூப் பதிவர்களிடம் கருத்துக் கூறுவது, மற்றவர்களையும் கருத்துக்கூற வைப்பது, படத்தின் முதல் நாள் வசூல் பகிரங்கமாக எகிறிவிட்டது என்று எக்ஸ், இன்ஸ்டா தளங்களில் பதிவிடுவது, மற்றவர்களையும் பதிவிட வைப்பது, “எதிரி” ரசிகர் எவரேனும் தப்பாகச் சொல்லிவிட்டால் அவரையும் அவருடைய நட்சத்திரத்தையும் வசையாடுவது என்று சில நாட்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவதில் தனக்கொரு முக்கியத்துவம் வந்துவிட்டதாக உணர்கிறார்.
இவ்வாறு செயல்களில் கவனத்தைப் பெறுவதன் மூலம் சமூகத்தில் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். இப்படி சினிமா மோகத்துடன் நாயக ஆராதனையாளராக இருப்பதை, நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட ஒரு பிரிவினர் அசூயையோடு ஒதுக்கலாம். ஆனால், இவர்கள் எந்த வர்க்கத்திலிருந்து வந்தார்களோ அந்த அடித்தட்டு மக்கள் இவர்களது ஈடுபாடுகளை மதிக்கத் தொடங்குகிறார்கள்.
தீவிர ரசிகர் ஒருவரின் பெற்றோருடன் பேச்சுக் கொடுத்தபோது, “படிச்சுட்டு வேலைக்குப் போவான்னுதான் நினைச்சோம். ஆனா இப்படி மன்ற வேலையிலே இறங்கிட்டான். நாளைக்கு அவங்க தலைவரு அரசியலுக்கு வந்துட்டாருன்னா இவனுக்கும் இங்கே பொறுப்புக் கொடுப்பாங்க… அதிகாரிகளோடெல்லாம் பேசப் போவான்… அரசியலுக்கு வராட்டியும் கூட நிறையப் பேரோட கான்டாக்ட்டு கிடைக்கும்… அப்படியே செட்டில் ஆயிடுவான்,” என்று கூறினர். the political impact of mgr and ntr part 2

அவர்களுடைய நம்பிக்கை வியக்க வைத்தது.“ரசிகர் மன்றத்தினால பல பேரு வீணாப் போறதா சொல்றாங்களே,” என்று கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் மேலும் வியக்க வைத்தது. “எல்லாரும் அப்படி ஆகிறதில்லை. சும்மா சுத்திக்கிட்டு இருக்காம இப்படி ஏதோ செய்றது நல்லதுதான். அதுக்கு மேல எதிர்காலத்திலே எப்படி இருக்கணும்னு அவன்தானே தீர்மானிக்கணும், அதுக்கான நேரம் வர்றப்ப அதுக்கேத்த மாதிரி முடிவு செஞ்சுக்குவான்.”
வீட்டின் ஒரு அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய ‘ஹாட் பாக்ஸ்’ பெட்டிகளைக் காட்டினார்கள். நெருங்கிக்கொண்டிருந்த நட்சத்திரத்தின் பிறந்தநாளில் அந்தப் பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக அவற்றை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதற்கான பணத்தை நடிகர்தான் கொடுத்தார் என்று ஒப்புக்கொண்டார்கள். அதில் ஒரு பெருமிதம் இருந்தது. the political impact of mgr and ntr part 2
(அடுத்த கட்டுரையுடன் நிறைவடையும்) the political impact of mgr and ntr part 2
சினிமா ரசிகவியல் – 1…. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஏற்படுத்திய அரசியல் தாக்கம்!
கட்டுரையாளர் குறிப்பு: அ. குமரேசன் the political impact of mgr and ntr part 2

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். பல்வேறு உலக இலக்கிய, அரசியல், சமூக படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். the political impact of mgr and ntr part 2