சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து, பின்னர் தொலைக்காட்சிக்குத் தாவி, அங்கு சில நிகழ்ச்சிகளில் தலைகாட்டி, ஒருகட்டத்தில் ‘போதும்.. இது போதும்..’ என்று குடும்ப வாழ்வுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ‘டாட்டா’ காட்டிச் சென்றவர்கள், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தங்கள் பிம்பத்தை ரசிகர்கள் ஆராதிக்க வேண்டுமென்று விரும்புவதில் எந்த தவறும் இல்லை.
அப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நீண்ட காலம் காத்திருந்த ஒருவருக்கு ‘ஜாக்பாட்’ அடித்தாற் போன்றதொரு வாய்ப்பு கிட்டினால் எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அந்த மனநிலையில் இருக்கிறாராம் தெலுங்கு நடிகை உதயபானு.
தொண்ணூறுகளில் சில தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ‘சின்ன ராமசாமி பெரிய ராமசாமி’ என்ற படத்திலும் தலைகாட்டினார்.
ஆனால், அப்படம் ‘ரிலீஸ்’ ஆகவில்லை. பின்னர் தெலுங்கு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, ரியாலிட்டி ஷோ நடுவராகப் பணியாற்றினார் உதயபானு. அதன் வழியே மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே பிரபலமானார். பிறகு குழந்தைகள் வளர்ப்பு, கணவரின் பணியில் உறுதுணை என்றிருந்தவர் தற்போது மீண்டும் தெலுங்கு பெரிய திரையில் தலைகாட்டியிருக்கிறார். இம்முறை அவர் வில்லியாகத் தோன்றியிருக்கிறார்.
சத்யராஜ் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிற ‘திர்பனதாரி பார்பரிக்’ படத்தில் ‘லேடி டான்’ ஆக நடிக்கிறார் உதயபானு. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சத்யராஜ் பேச்சுக்கு ஈடாக இவரது கருத்துகளும் ‘வைரல்’ ஆகின. “இது போன்ற வாய்ப்புகள் மிக அரிதாகத்தான் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை வாசித்தவுடனேயே, இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொள்வதென்று முடிவு செய்துவிட்டேன்” என்றிருக்கிறார் உதயபானு.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதன்பிறகே உதயபானுவின் பங்களிப்பு குறித்த கவனம் தெலுங்கு திரையுலகில் அதிகமாகியிருக்கிறது. இந்தப் படம் தனது ‘ரெண்டாவது இன்னிங்ஸ்’ஸை தீர்மானிப்பதாக அமையும் என்று உறுதியாக நம்புகிறார் உதயபானு. அவரது நம்பிக்கை மெய்யாகிறதா என்பதைப் பார்க்கலாம்..!