இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ மூலமாகப் புகழ் பெற்றவர் நடிகை மது ஷாலினி. அந்தப் படத்தில் ஆர்யாவின் ஜோடியாகத் தோன்றியிருந்தார்.
தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்ற நாயகியாகத் திகழ்ந்த இவர் தமிழில் ‘பழனியப்பா கல்லூரி’ மூலமாக அறிமுகம் ஆனார். பின்னர் ’பதினாறு’ படத்தில் மிர்ச்சி சிவாவின் ஜோடியாக நடித்தார்.
பிரம்மன், தூங்காவனம் படங்களில் சிறு பாத்திரங்களில் தோன்றியவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் ’பஞ்சராக்ஷ்ரம்’ படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்றிருந்தார். ஆர்.கே.சுரேஷ் உடன் ‘விசித்ரன்’ படத்திலும் நடித்திருந்தார்.
சமீபகாலமாக நடிப்பில் இருந்து விலகியிருந்து வந்தார் மது ஷாலினி; ஒரு இடைவெளிக்குப் பிறகு, இப்போது தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார்.
ஸ்ருஜன் அட்டடா தயாரித்து இயக்கியுள்ள ‘கன்யாகுமரி’ தெலுங்கு திரைப்படத்தினை மது ஷாலினி வழங்குகிறார். இயக்குனர் வெற்றிமாறன், நாயகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் சில நல்ல திரைப்படங்களைக் கண்டு ரசித்து, பின்னர் அதனை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட அந்த வழியில் இவரும் இறங்கியிருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாதில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய மது ஷாலினி, ‘இது தனது முதல் முயற்சி’ என்று தெரிவித்தார்.

கதை நிகழும் களத்தில் வாழ்பவர் போலவே நாயகன் ஸ்ரீசரணும் நாயகி கீத் சைனியும் படத்தில் தென்படுவதாகக் கூறினார். ஒரு படி மேலே சென்று, கீத் சைனியின் ரசிகையாகத் தான் மாறிவிட்டதாகத் தெரிவித்தார். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்கள் அனைவரையும் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டியது சிறப்பான விஷயம்.
ஸ்ரீகாகுளம் பகுதியில் நிகழ்வதாக இக்கதை வடிவமைக்கப்பட்டிருப்பதால், அவ்வட்டாரத் தெலுங்கு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நகரத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமென்ற ஆசையுடன் இருக்கிற நாயகியும் கிராமத்தில் விவசாயம் செய்ய வேண்டுமென்ற வேட்கையுடன் இருக்கிற நாயகனும் பதின்ம வயதில் காதலிக்கத் தொடங்குகின்றனர்.

இருபதைத் தாண்டியபிறகு நாயகன் தனது லட்சியத்தில் வெற்றி பெறுகிறார். நாயகியோ, அருகிலுள்ள ஊரில் ஒரு சிறிய ஜவுளிக்கடையில் பணிப்பெண் ஆகச் சேர்கிறார்.
இவ்விருவரின் காதல் என்னவானது என்று சொல்கிறதாம் இப்படம்.
கதை மட்டுமல்ல, ‘கன்யாகுமரி’யின் ட்ரெய்லரும் சிறப்பான எண்ணத்தை விதைப்பதாக உள்ளது. அனைத்துக்கும் மேலாக, மது ஷாலினியின் தயாரிப்பாளர் அவதாரம் இப்படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வரும் 27ஆம் தேதியன்று இப்படம் வெளியாகிறது.
சில நேரங்களில் பந்தயத்தில் யாரும் பெரிதாக எதிர்பார்க்காத குதிரை வெற்றிவாகை சூடும். அப்படியொரு படமாக ‘கன்யாகுமரி’ அமையுமா? பார்க்கலாம்..!
