மீண்டும் நடிக்க வரும் ஹர்பஜன் சிங் மனைவி!

Published On:

| By Kavi

கீதா பஸ்ராவைத் தமிழில் சில விளம்பரப் படங்களில் பார்த்திருப்போம். பிரபலமான மாடலாக விளங்கிய இவர் இந்தியில் ‘தி ட்ரெய்ன்’, ‘ஜில்லா ஹாஜியாபாத்’ என நான்கைந்து படங்களில் ஹீரோயினாக நடித்தார். பிறகு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை மணந்துகொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

கிட்டத்தட்ட பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் கீதா பஸ்ரா நடிக்க வந்திருக்கிறார். இம்முறை ‘மெஹர்’ எனும் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக தோன்றியிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பவர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா.

”இரண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு இந்திப் படத்துல நடிச்சேன். இப்போ வரைக்கும் அது வெளிவரலை. அதனால, மெஹர் தான் என்னோட ’கம்பேக்’ பிலிம். இதை நான் நெகட்டிவ்வா சொல்லலை. இதுக்கு முன்னால என்னோட வாழ்க்கையில, குடும்பத்துல சில விஷயங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது” என்று சொல்லும் இவர், தான் ரொம்பவே விரும்புவதைச் செய்யுமாறு கணவர் எப்போதும் உற்சாகப்படுத்துவார் என்று கூறுகிறார்.

“வீட்ல ஒருத்தர் வேலை விஷயமா வெளியே கிளம்புனா இன்னொருத்தர் குழந்தைகளைப் பார்த்துக்கணும். அந்த வகையில என் கணவர் எனக்கு சப்போர்ட்டா இருக்குறார்” என்றிருக்கிறார்.

ADVERTISEMENT

ஓடிடி தளங்களில் வருகிற சீரிஸ்கள், படங்களில் நடிப்பது பற்றிய கேள்விக்கு, ”அது மாதிரியான ஷோக்கள்ல ஒரு பகுதியா இருக்க ஆசைப்படுறேன். இதுக்கு முன்னால பெண்களுக்கு இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைச்சதில்ல. இப்போ ஓடிடி வழியாக அப்படிப்பட்ட வாய்ப்புகள் நிறையவே கிடைக்குது” என்றிருக்கிறார் கீதா பஸ்ரா.

அதாகப்பட்டது, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பழைய நிலையிலேயே நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை ஓடிடி தளங்கள் வழங்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

சுண்டியிழுக்கும் விளம்பரப்பட நடிகையாகத் திகழ்ந்த கீதா பஸ்ராவுக்கு, இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸ்’ஸிலாவது சிறப்பான பட வாய்ப்புகள் அமையட்டும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share