சர்வதேச கச்சா எண்ணெய் (Crude Oil) சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவற்றிற்கு மத்தியில், நம் நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுக்காக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதி மீதான ‘விண்ட்ஃபால் வரி’ (windfall tax – எதிர்பாராத கூடுதல் லாபத்தின் மீதான வரி) கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் அமல்:
அதே வேளையில், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய வரி விகிதங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மறுஆய்வில், சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) கட்டமைப்பில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
டீசல் ஏற்றுமதி: டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.14-லிருந்து ரூ.8.5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருள்: விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.12.5-லிருந்து ரூ.7.5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஏற்றுமதி: பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.1.5-லிருந்து ரூ.4-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது?
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதற்குப் பதிலாக ஏற்றுமதி செய்வதன் மூலம் நியாயமற்ற லாபத்தை ஈட்ட முற்படுகின்றன.
எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாது
அரசின் இந்த முடிவு நிறுவனங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதைத் தடுத்து, உள்நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும், உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தற்போதைய வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இதனால் பொதுமக்களுக்கான சலுகை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
