இந்தியாவில் மின்சார வாகன (EV) பயன்பாடு இப்போது ‘ஆரம்பகாலப் பயன்பாட்டாளர்கள்’ (early adopters) என்ற கட்டத்தைக் கடந்துவிட்டது. மின்சார வாகனப் பிரிவில் தனது முதன்மையான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் (TMPV) நிறுவனம் 2030-31 நிதியாண்டுக்குள் நான்கு புதிய மின்சாரக் கார்களையும், 10க்கும் மேற்பட்ட மேம்பட்ட மாடல்களையும் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
டாடா மோட்டார்ஸ் இலக்கு
‘ஆரம்பகாலப் பயன்பாட்டாளர்கள்’ என்பது போட்டித்தன்மையில் முன்னிலை பெற புதிய யோசனைகள் அல்லது தொழில்நுட்பங்களை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். மின்சார வாகனப் பிரிவில் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகத் தயாராகி வருவதாகவும், 2030-31ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தைப் பங்கை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி
இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை ‘ஆரம்பகாலப் பயன்பாட்டாளர்கள்’ நிலையிலிருந்து ‘ஆரம்பகாலப் பெரும்பான்மையினர்’ (early majority) நிலைக்கு மாறியுள்ளது.
“தற்போது, ’ஆரம்பகாலப் பெரும்பான்மையினரும்’ மின்சார வாகனங்களைப் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பகால மற்றும் பிற்காலப் பெரும்பான்மை (late majority) வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரிடையேயும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவோம்” என்று TMPV நிறுவனம் கூறியது.
மின்சார வாகனச் சந்தையில் ‘புதுமை விரும்பிகள்’
மின்சார வாகனச் சந்தையில் ஆரம்பகாலப் பயன்பாட்டாளர்கள் 13.5 சதவீதமாகவும், ஆரம்பகாலப் பெரும்பான்மையினர் மற்றும் பிற்காலப் பெரும்பான்மையினர் தலா 34 சதவீதமாகவும் உள்ளனர். மாற்றத்தைத் தாமதமாக ஏற்றுக்கொள்பவர்கள் (laggards) 16 சதவீதமாகவும், புதுமை விரும்பிகள் (innovators) 2.5 சதவீதமாகவும் உள்ளனர். புதுமை விரும்பிகள் என்பவர்கள் புதிய விஷயங்களை முதலில் முயற்சிக்கும் இடர் ஏற்பவர்கள் (risk-takers) ஆவர். அதே சமயம் மாற்றத்தைத் தாமதமாக ஏற்றுக்கொள்பவர்கள் என்பவர்கள் மாற்றத்தை எதிர்க்கும் மற்றும் அதை ஏற்றுக்கொள்வதில் கடைசியாக இருக்கும் பாரம்பரிய வாடிக்கையாளர்கள் ஆவர்.
