தூத்துக்குடி- மும்பை இடையே புதிய நேரடி ரயில் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்துமா? என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். Tamil Nadu Railway Projects
மக்களவையில் இன்று ஜூலை 23-ந் தேதி திமுக எம்பிக்கள், தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் விவரம்:
கனிமொழி : தூத்துக்குடிக்கும் மும்பைக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணைப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த தேவை இருப்பதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா என்றும் இதன் அடிப்படையில் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரசை (ரயில் எண். 11043/11044) தூத்துக்குடிக்கு நீட்டிப்பதன் மூலமோ அல்லது புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலமோ இத்தேவையை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைந்திருக்கிறதா?
டிஆர் பாலு: பாம்பனில் கடலில் ஒரு புதிய லிப்ட் பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் சேவைகளை இயக்க வேண்டும். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக புதிய பாம்பன் லிப்ட் பாலம் பல நாட்களாக செயல்படாமல் உள்ளது. அதை விரைவில் சரி செய்யவும், அதன் கீழ் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக எப்போது மீண்டும் செயல்படும்?
தமிழச்சி தங்கபாண்டியன்: ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன?
ராணி ஸ்ரீகுமார்: 2018 ஆம் ஆண்டில் ரயில் பாதை மாற்றம் முடிந்த போதிலும், திருநெல்வேலி-பாவூர்சத்திரம்-தென்காசி-கொல்லம் பாதையில் நேரடி பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏன்?
கணபதி ராஜ்குமார்: போத்தனூர் ரயில் நிலையம் கோயம்புத்தூரின் இரண்டாவது சந்திப்பாக எப்போது மாற்றப்படும்? சேலம் கோட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் போத்தனூர் ரயில் நிலையம் உட்பட அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளின் நிலை என்ன? மேற்படி நிலையத்தில் பல்வேறு மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு? பணிகள் நிறைவடைய தேவைப்படும் கால அவகாசம் என்ன?
ரயில் விபத்துகள் குறித்து செல்வகணபதி: காலியாக உள்ள கெசட்டட் அல்லாத பதவிகளுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே முடிவு எடுத்துள்ளதா? கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு அவர்களை ஒப்பந்த அடிப்படையில் தன்னார்வலர்களாக நியமிக்க அதிகாரம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட காலியாக உள்ள பதவிகவிளை நிரப்ப இந்த முறை பின்பற்றப்படுவது பற்றிய விவரங்கள் என்ன? கடந்த சில ஆண்டுகளில் நடந்த அனைத்து ரயில் விபத்துகளுக்கும் பணியாளர் பற்றாக்குறையால் ஏற்பட்ட மனித தவறு முக்கிய காரணமாக இருந்தது. இது தொடர்பாக ரயில்வே எடுத்த திருத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?
ரயில் கட்டண உயர்வுக்கு திமுக கண்டனம்
ரயில் கட்டண உயர்வு குறித்து திமுக எம்.பி.க்கள் சி என் அண்ணாதுரை, செல்வம், முரசோலி ஆகியோர் எழுப்பிய கேள்வி: கட்டண உயர்வால் மெயில்/எக்ஸ்பிரஸ், பயணிகள், சூப்பர்ஃபாஸ்ட், வந்தே பாரத் போன்ற ரயில்களின் ஸ்லீப்பர், ஏசி, ஜெனரல் என அனைத்து வகுப்புகளும் பாதிக்கப்படும், மேலும் முன்மொழியப்பட்ட கட்டண உயர்வு காரணமாக, நீண்ட தூர மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்களில், குறைந்த/நடுத்தர வருமானம் கொண்ட குழு மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளின் அன்றாட பயணிகள் மீது ஏற்படக்கூடிய நிதிச் சுமையை ஒன்றிய அரசு உணரவேண்டும், குறைந்த வருமானம் கொண்ட பயணிகள், EWS, மூத்த குடிமக்கள் மற்றும் அத்தியாவசிய பயண வகைகளுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
அதேபோல் அதிகரித்து வரும் கட்டணங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தின் விவரங்கள் மற்றும் சமீபத்திய கட்டண உயர்வின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வருவாய் அதிகரிப்பு எவ்வளவு? வருவாய் உருவாக்கத்துடன் சுலுகைகளையும் வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்ன?. வெவ்வேறு வகுப்புகளுக்கான கட்டண உயர்வுகளை முடிவு செய்வதற்கு முன் ஏதேனும் பொது ஆலோசனையை ஒன்றிய அரசு கேட்டுள்ளதா? புறநகர் ரயில் சேவைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் வண்டிகளை அதிகப்படுத்தவும் அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் மற்றும் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?