குன்றத்தூர் குழந்தைகள் கொலை வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிரேகா மின்னம்பலத்துக்கு பேட்டி அளித்தார். kundrathur child murder abirami convict
திருமணத்தை மீறிய உறவுக்காக குழந்தைகளை கொன்ற குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமிக்கும், கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும் வரையில் ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் இன்று (ஜூலை 24) தீர்ப்பு வழங்கினார்.
இதற்கு முன்னதாக இவ்வழக்கில் கடந்த ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் காரசாரமான விவாதங்கள் நடந்தன.
பாதிக்கப்பட்டத் தரப்பிற்கு அரசு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். முதல் குற்றவாளி அபிராமிக்காக வழக்கறிஞர் சாலமன் உட்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் இரண்டாவது குற்றவாளி சுந்தரத்துக்காக வழக்கறிஞர் சோமசுந்தரமும் ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் என்னென்ன வாதங்கள் வைக்கப்பட்டன என இவ்வழக்கை ஆரம்பத்தில் இருந்து கையாண்ட அரசு வழக்கறிஞர் சசிரேகாவிடம் மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு கேட்டோம்.
“குற்றவாளிகளுக்காக பல வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இறந்த குழந்தைகளுக்காக அரசு வழக்கறிஞராக நான் மட்டுமே ஆஜராகி வாதாடிவந்தேன்.
‘இந்த கொலைக்கு முன்விரோதம் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் (அபிராமியும், சுந்தரமும்) எந்த குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை. இந்த வழக்கில் நேரடி சாட்சியும் இல்லை. இரண்டு பேருக்கும் எந்த தொடர்பும் இல்லை ’ என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.

இந்த வழக்கில் நேரடி சாட்சியம் இல்லை என்றும் அதனால் தீர்ப்பு தனக்கு சாதமாக வரும் என்றும் அபிராமியும் நம்பிக்கையில் இருந்து வந்தார்.
இந்தசூழலில் விசாரணை அதிகாரிகள் புலனாய்வு செய்த சாட்சிகளையும், ஆதாரங்களையும் எடுத்துவைத்தேன்.
குழந்தைகளை கொன்றுவிட்டு அபிராமி தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு சென்று நிறுத்திவிட்டு, அங்கிருந்து நாகர்கோயில் பஸ் ஏறி சென்றுவிட்டார். நாகர்கோயில் சென்றதும் அங்குள்ள காருன்யா விடுதியில் தங்குவதற்கு அறை கேட்டார்.
அதற்கு அங்கிருந்த ஊழியர், இப்போது மேனேஜர் இல்லை. அவர் வந்ததும் அறை கொடுப்பார் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு அபிராமி, நான் ஃப்ரஸ் அப் மட்டும் செய்துக்கொள்கிறேன் என்று கேட்க, அதற்கு அந்த ஊழியர் அனுமதித்திருக்கிறார். இதையடுத்து முகம் கழுவிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய அபிராமி மீண்டும் அந்த விடுதிக்கு வரவில்லை.
நாகர்கோயிலில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார். கோயம்பேட்டில் நிறுத்திவைத்திருந்த தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அப்போது அங்கு வந்த சுந்தரமும் ஸ்கூட்டியில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
இவர்கள் ஒன்றாக ஸ்கூட்டியில் சென்ற சிசிடிவி ஃபுட்டேஜ்கள், நாகர்கோயில் விடுதிக்கு அபிராமி சென்ற போது அங்கு பதிவான ஃபுட்டேஜ்கள்,
இருவரது செல்போனில் பேசிய மெசேஜ், வாட்ஸ் அப் சாட், இரவு பகலாக போனில் பேசிய கால் லிஸ்ட், வாய்ஸ் ரெக்கார்டு வீடியோ காலில் பேசியது என அனைத்து ஆதாரங்களையும் நீதிபதி முன் எடுத்து வைத்தேன்
இதைவிட, அபிராமி குடியிருந்த வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்த கவிதா ராமகிருஷ்ணன் சாட்சி முக்கியமானது.
’அபிராமி கணவர் விஜய் வேலைக்கு போனதும் உடனடியாக சுந்தரம் வீட்டுக்கு வந்துவிடுவார். ரொம்ப நேரம் இருவரும் வீட்டுக்குள்ளே இருப்பார்கள். ஒருநாள், இரண்டு நாள் அல்ல அடிகடி வந்துவிட்டு போவார். அதை நாங்களும் பார்த்திருக்கிறோம்.
குழந்தைகளை கொல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மேலே இருந்து சுந்தரமும், அபிராமியும் ஒன்றாக இறங்கி வந்தார்கள். அப்போது அவர்கள், பாலில் இதை கலந்துகொடுத்துவிடலாம் என்று பேசிக்கொண்டே வந்தார்கள்.
இதை கேட்டு அபிராமியிடம், பாலில ஏதோ கலக்கபோகிறீர்கள் என்று பேசிக்கொண்டு வருகிறீர்களே என்னம்மா? என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்ல தடுமாறினார். பின்னர், குழந்தைகள் மாத்திரை மருந்து சாப்பிடமாட்டிங்கிறாங்க… அதான் பாலில் கலந்து கொடுக்கலாமென பேசிகிட்டு வந்தோம் என்றார்.
ஆனால் இரண்டு பிஞ்சுகளை கொல்வதற்குதான் பாலில் விஷம் கலப்பது தொடர்பாக சதி தீட்டியிருக்கிறார்கள் என்று குழந்தைகள் இறந்த பிறகுதான் தெரிகிறது’ என சாட்சியம் அளித்தார் கவிதா.

இப்படி பல சாட்சிகளையும் ஆதாரங்களையும் வைத்துதான் வாதாடினேன்.குறுக்கு விசாரணை செய்தேன். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளார்.
இந்த தீர்ப்பால், இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் யோசிப்பார்கள். குற்றங்களும் குறையும்” என்றார் அரசு வழக்கறிஞர் சசிரேகா. kundrathur child murder abirami convict
