ADVERTISEMENT

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் : தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 19), தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த 2024 பிப்ரவரி 21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட முன்வடிவை கொண்டுவந்தார். இது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 2024 டிசம்பர் 16ஆம் தேதி ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் 2023-24ஆம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில், சாலை உட்கட்டமைப்பு போன்ற பெரிய பணிகளை செயல்படுத்துவதில் கால தாமதங்களை தவிர்த்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செயல்படுத்த, துரிதமாக முடிவுகள் உடனுக்குடன் எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.

ADVERTISEMENT

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று முடிவுகளை கால தாமதமின்றி எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த அமைப்பானது பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் பணிகளை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆறுவழிச்சாலைகள் / அதிவேக விரைவுச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் சாலைப் பணிகளை செயல்படுத்தவும்,

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பை உலகத் தரத்தில் மேம்படுத்தும் நோக்குடனும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் எனும் புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டு, அதன் இலச்சினையும் வெளியிடப்பட்டது.

இந்தப் புதிய ஆணையம், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உயர்தரக் கட்டுப்பாடுகள். குறிப்பிட்ட காலம் மற்றும் மதிப்பீட்டில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.

இதன்மூலம் சாலை பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுடன், பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை மேம்பாடும் ஏற்படும். அத்துடன் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலை வலையமைப்புடன் இணைக்கப்படுவதோடு, பொதுமக்கள் விரைவாகவும். பாதுகாப்பாகவும் தங்கள் இடங்களை அடைய உதவுவதுடன், சாலை அணுகல் வசதியையும் பெருக்கி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த புதிய நெடுஞ்சாலை ஆணையம் கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தில் செயல்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share