அநியாயத்துக்கு எதிராக பேசுவது அரசியல் எனில் நாங்கள்- திரைக் கலைஞர்கள் அரசியல்தான் பேசுகிறோம் என்று மூத்த நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

“பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூரப் போரை நிறுத்து! சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரி” என்ற முழக்கங்களுடன் சென்னையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று (செப்டம்பர் 19) பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் பாலஸ்தீனத்தின் தந்தை யாசர் அராபத் அணிந்திருந்த துண்டை நினைவுபடுத்தும் வகையிலான துண்டுகளை அணிந்தபடி விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், எங்களை எல்லாம் அதாவது திரைக்கலைஞர்களை எல்லாம் கேட்பாங்க.. ‘நீங்கள் எல்லாம் ஏன் இந்த மாதிரி போராட்டத்துக்கு வருகிறீர்கள்’ என… ஒரு அநியாயத்துக்கு எதிராக பேசுறது அரசியல் என்றால் நாங்கள் அரசியல்தான் பேசுகிறோம்.. போர் முடிந்து தலைவர்கள் புறப்பட்டுப் போன பின்னரும் ஒரு மூதாட்டி தன் மகனுக்காக காத்திருப்பாள்.. ஒரு பெண் கணவருக்காக காத்திருப்பார்.. குழந்தைகள் அப்பாவுக்காக காத்திருப்பார்கள் என ஒரு கவிதை இருக்கிறது.
இந்த நாட்டை, மண்ணை விற்றது யார் என எங்களுக்கு தெரியாது..ஆனால் அதை விலைக்கு கொடுத்தது யாரு என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் மவுனமாக இருந்தால் இதுதான் நடக்கும். ஒரு நாட்டுக்கு, மனித நேயத்துக்கு காயம் ஏற்படும் போது மவுனமாக இருந்தால் அந்த காயம் அதிகமாகும்.
காஸா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மட்டும் காரணம் அல்ல.. அமெரிக்காவும் காரணம்.. மவுனமாகவே இருக்கிற மோடியும்தான் காரணம்.. அதை எதிர்த்து பேசாத ஒவ்வொரு மனிதனும் காரணம் என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், “எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு கூட்டம் நடந்திருக்காது. இங்குதான் நடக்கிறது. அதுதான் தமிழ்நாடு. இந்த அடையாளத்தை அழிப்பதற்காகத்தான் வடநாட்டில் இருந்து இங்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள் மனிதநேயத்தையும், சமூக நீதியையும் தூக்கிப்பிடிப்பது தமிழ்நாட்டு மக்கள் மட்டும்தான் என்றார்.
