வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வறுமை ஒழிப்பு என்பது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் சவாலாகத் தொடர்கிறது. ஏராளமான வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்திய பிறகும், பெரும்பான்மையான மக்களிடம் வறுமை தொடர்ந்தது.
ஆனால், 2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் வறுமையின் பிடியிலிருந்து தப்பியவர்களின் எண்ணிக்கை 13.55 கோடி என 2023-ல் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு (National Multidimensional Poverty Index) அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் 2023-24 ஆண்டுக்கான நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 2023-24-க்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 78 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் வறுமை நிலைக் குறியீடானது 2015-16-ம் ஆண்டுக்கான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
கல்வி, நலவாழ்வு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் இந்தியா முழுவதும் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கும் தேவையை இந்தக் குறியீடுகள் உணர்த்துகின்றன.
மிகவும் அடிப்படையான இந்தத் தேவைகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பது பெருமைக்குரியது.
தமிழ்நாட்டில், அறுபதுகளின் இறுதியிலிருந்து மாநிலக் கட்சிகளின் ஆட்சி தொடர்ந்து வரும் நிலையில், மாநில அரசியலின் வெற்றியாகவும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பனீரை எப்படிப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது?
என்ன ராஜேஷ்…ஜெயிச்சிட்டியா? 9 ஆவது ரவுண்டில் ஸ்டாலின் போட்ட போன்!